Published : 17 Mar 2023 06:37 AM
Last Updated : 17 Mar 2023 06:37 AM

கோவை | காரமடை வனச்சரகத்தில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் யானை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டம்

காரமடையை அடுத்த வெள்ளியங்காடு அருகே வாயில் காயத்துடன் உணவு ஏதும் உட்கொள்ள முடியாமல் உடல் மெலிந்து சுற்றிவரும் யானை.

கோவை: காரமடை வனச்சரகத்தில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயத்துடன் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வருகிறது. அந்த யானை வனத்துக்குள் செல்வதும் மீண்டும் விவசாய நிலத்துக்கு திரும்புவதுமாக உள்ளது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் அன்றாட பணியை மேற்கொள்ள அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உணவோ, நீரோ உட்கொள்ள இயலாமல் உடல் மெலிந்து தவித்துவரும் அந்த யானைக்கு வனத்துறை மருத்துவ குழு மூலம் நேற்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “யானையின் வாயில் அடிபட்டுள்ளது. எந்த உணவும் உட்கொள்ள முடியாதநிலையில்தான் யானை உள்ளது. சுமார் 3 வாரங்கள் வரை அது உணவு உட்கொள்ளாமல் உள்ளது என கருதுகிறோம். தொடர்ந்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கிடைத்தவுடன் யானையை பிடித்து சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க வசதியாக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. இன்னொரு யானையுடன் ஏற்பட்ட சண்டையில் இந்த யானையின் வாயில் அடிபட்டிருக்கலாம். மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்யும்போதுதான் காயத்துக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x