Published : 02 Mar 2023 08:12 AM
Last Updated : 02 Mar 2023 08:12 AM
கோவை: கோவை மதுக்கரை அருகே ரயிலில் அடிபடாமல் மக்னா யானை மயிரிழையில் தப்பியது. ரயில்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் இயக்கப்படுகின்றனவா என்பதை அறிய ‘ஸ்பீடு கன்’ வாங்கி, பொருத்தும் பணி விரைவில் நிறைவடையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை - பாலக்காடு வழித் தடத்தில் கஞ்சிகோடு - எட்டிமடை இடையே ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு ரயில் பாதைகள் உள்ளன. ‘ஏ’ லைன் அடர்ந்த வனப்பகுதிக்கு வெளியிலும், ‘பி’ லைன் அடர் வனப்பகுதிக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பாதைகளில் யானைகள் மீது ரயில் மோதும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளன.
கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி கர்ப்பிணி யானை உட்பட மூன்று யானைகள் கடந்த 2021 நவம்பர் 26-ம் தேதி உயிரிழந்தன. இதையடுத்து, மதுக்கரை - வாளையாறு வழித் தடத்தில் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க ரயில்வே, வனத்துறையினர் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அண்மையில் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப் பகுதியில் இருந்து வெளியேறி, கோவை வந்த மக்னா யானை, மதுக்கரை அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற போது வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியதால் நூலிழையில் தண்டவாளத்தை கடந்து சென்று உயிர் தப்பியது.
இல்லையெனில், யானை மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. யானைகள் கடக்கும் பகுதி என்பதால் போத்தனூர் - பாலக்காடு இடையேயான ஏ, பி லைனில் இரவு நேரங்களில் ரயில்களின் வேகம் மணிக்கு 45 கிமீ எனவும், பகலில் ரயில்களின் வேகம் 65 கிமீ எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குறிப்பிட்ட வேகத்தின்படிதான் ரயில்கள் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் நீடிக்கிறது. சில ரயில்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி இயக்கப்படுவதாகவும் வனப்பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரயில்கள் எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை வனத்துறையினர் தற்போது தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றனவா என்பதை கண்டறிய ஏ, பி ஆகிய இரு ரயில் பாதைகளின் அருகே ‘ஸ்பீடு கன்’ பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ரயில்களின் வேகம் பதிவு செய்யப்படும். இதனை வாங்குவதற்கு டெண்டர் நடைமுறைகள் இன்னும் முழுமையடையவில்லை. மறு டெண்டர் கோரியுள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்தப்பணிகள் நிறைவடையும். ரயில்களின் வேகம் தொடர்பாக உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதால், ரயில்வே தரப்பிலும் கவனமாகவே கையாள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT