Published : 28 Feb 2023 06:39 PM
Last Updated : 28 Feb 2023 06:39 PM

சென்னையில் 20 நாட்களில் 1,938 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.14.16 லட்சம் அபராதம் விதிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யும் மாநகராட்சி அதிகாரிகள் | கோப்புப்படம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிப்.1 முதல் பிப்.20ம் தேதி வரை 1,938 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14,16,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை அழகுபடுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 01.02.2023 முதல் 20.02.2023 வரை மாநகராட்சி அலுவலர்களால் 15 மண்டலங்களில் உள்ள தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 17,884 இடங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4,972 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,937.9 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14,16,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில், ஆய்வு செய்யப்பட்ட 895 வணிக நிறுவனங்களில் இருந்து 430.5 கி.கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 94 வணிக நிறுவனங்களுக்கு ரூ.2,13,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அடையாறு மண்டலத்தில் 592 வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,74,400ம், அண்ணாநகர் மண்டலத்தில் 609 வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,44,600ம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளிலும், நடைபாதைகளிலும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களில் காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் இதரப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் வியாபாரம் செய்வோர், பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x