Published : 09 Feb 2023 02:42 PM
Last Updated : 09 Feb 2023 02:42 PM

மக்னாவிடம் இருந்து பிரிந்ததால் ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை: சவுளூர் மக்கள் அச்சம்

பிரதிநிதித்துவப் படம்

தருமபுரி: தருமபுரியில் மக்னாவிடம் இருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை தருமபுரி அடுத்த சவுளூர் பகுதியில் கரும்பு வயலில் நுழைந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் வழியாக ஒரு மக்னா மற்றும் 1 ஆண் யானை இணைந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் நுழைந்தது. அதன்பின்னர், பாலக்கோடு, பென்னாகரம் வனச் சரக பகுதிகளில் வனத்தையொட்டி அமைந்துள்ள விளைநிலங்களில் இந்த யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வந்தன.

மேலும், ஒரு வாரம் முன்பு பாலக்கோடு அருகே வயலில் இரவுக் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரை மக்னா யானை தாக்கியது. இந்நிலையில், மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியதால் அதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதற்காக, கோவையில் இருந்து கும்கி யானையும் ஒன்றும் வரவழைக்கப் பட்டது.

கடந்த 5-ம் தேதி மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் அந்த யானையை வனத்துறையினர் ஆனைமலைக்கு பிடித்துச் சென்றனர். இதனால், அந்த மக்னா யானையுடன் இணைந்து சுற்றிவந்த சுமார் 20 வயதுடைய ஆண் யானை தனித்து விடப்பட்டது.

இந்த ஆண் யானை நேற்று முன் தினம் இரவு வனத்தில் இருந்து வெளியேறி பாப்பாரப்பட்டி, கொளகத்தூர், சவுளூர் ஆகிய கிராமங்களைக் கடந்து தருமபுரி அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதிக்கு வந்துள்ளது. நேற்று காலை அங்குள்ள குடியிருப்புகளைக் கடந்து கரும்பு தோட்டம் ஒன்றில் நுழைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தருமபுரி வனச் சரகர் அருண் பிரசாத் தலைமையில் அப்பகுதிக்கு சென்று யானையை இடம்பெயரச் செய்ய முயற்சித்தனர். வயலுக்குள் நுழைந்த யானை கரும்புகளை ஒடித்து உண்டபடி உள்ளேயே தங்கியதால் பகலில் யானையை வெளியேற்ற முடியவில்லை.

எனவே, 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல, யானை தங்கியுள்ள வயல் அருகே பொதுமக்கள் செல்வதை வகையில் தடுக்கும் பணியில் தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் ஈடுபட்டனர். கரும்புத் தோட்டம் பெரிதாக இருப்பதால், இரவில் யானை இயல்பாக வயலில் இருந்து வெளி யேறும்போது வனப்பகுதியை நோக்கி இடம்பெயரச் செய்ய தேவையான ஏற்பாடுகளுடன் வனத்துறையினர் அப்பகுதியில் காத்திருந்தனர்.

தனித்து பிரிக்கப்பட்ட ஒற்றை யானை ஊருக்குள் நுழைந்திருப்பதால் சவுளூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஒற்றை யானையை விரைந்து வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்யும் நடவடிக்கையை வனத்துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x