Last Updated : 22 Nov, 2022 04:00 AM

 

Published : 22 Nov 2022 04:00 AM
Last Updated : 22 Nov 2022 04:00 AM

ஆனைமலை, முதுமலை முகாம் யானைகள் பராமரிப்பை மேம்படுத்த 13 பாகன்கள், உதவியாளர்களுக்கு தாய்லாந்தில் ரூ.50 லட்சத்தில் பயிற்சி

கோவை: ஆனைமலை, முதுமலை முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளின் பராமரிப்பை மேம்படுத்த, 13 பாகன்கள், உதவியாளர்கள் தாய்லாந்து சென்று ரூ.50 லட்சத்தில் பயிற்சி பெற அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு நேற்று பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாம்கள் நாட்டிலேயே பழமையான முகாம்கள் ஆகும். முதுமலை யானைகள் முகாமில் தற்போது 28 யானைகள், 22 பாகன்கள் , 12 உதவியாளர்கள், 21 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். ஆனைமலை யானைகள் முகாமில் 26 யானைகள், 15 பாகன்கள், 16 உதவியாளர்கள், 19 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர்.

இதுதவிர, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 யானைகள், திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 7 யானைகள் உள்ளன. இதில், பெரும்பாலான பாகன்கள், உதவியாளர்கள் மலசர், இருளர் மற்றும் பிற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். முகாம்களில் உள்ள யானைகள் பராமரிப்பு, அவற்றுக்கு பயிற்சி ஆகியவை பழங்குடியினரின் பாரம்பரிய அறிவைக்கொண்டு நடைபெற்று வருகின்றன. இருப்பினும், அவர்கள் மற்ற பகுதிகளில் உள்ள யானைகள் முகாம், பயிற்சி முகாம்களில் யானைகளை பராமரிக்க பின்பற்றப்படும் நவீன அறிவியல் முறைகள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை பெறவில்லை.

தாய்லாந்து நாட்டின் லாம்பங்-கில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையம் (டிஇசிசி), அறிவியல் ரீதியாக யானைகளை பராமரிப்பதில் பெயர் பெற்றதாகும். 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மையத்தில், தற்போது 50-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாய்லாந்தில் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முன்னணி மையமாகவும், ஆராய்ச்சி மையமாகவும் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், யானைப் பாகன்களுக்கு அங்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

எனவே, தமிழகத்தைச் சேர்ந்த பாகன்கள், உதவியாளர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றால், இங்குள்ள வளர்ப்பு யானைகளை பராமரிப்பது மேம்படும். இதுதொடர்பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் பரிந்துரை அனுப்பியுள்ளார். அதில், ‘ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த 2 பாகன்கள், 3 உதவியாளர்கள், திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த ஒரு பாகன், உதவியாளர், முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த தலா 3 பாகன்கள், உதவியாளர்கள் ஆகியோருடன் ஒரு வனச்சரக அலுவலர், கால்நடை ஆய்வாளர் ஆகியோரை தாய்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பலாம்.

இந்த பயிற்சிக்கு மொத்தம் ரூ.50 லட்சம் செலவாகும். இந்த செலவு ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பக அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x