Published : 01 Nov 2022 04:40 AM
Last Updated : 01 Nov 2022 04:40 AM
நாடு முழுவதும் மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் உணவு விநியோக நிறுவனங்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த நிறுவனங்களின் விநியோக பணிக்கு பெரும்பாலும் இருசக்கர மோட்டார் வாகனமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையை பொருத்தவரை, சுமார் 40 ஆயிரம் டன் கார்பன் வெளியேற்றம் மேற்கூறிய விநியோக பயன்பாட்டுக்கான வாகனங்களாலேயே ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, அந்த நிறுவனங்கள், விநியோக பணிகளில் ஈடுபடும் தங்களது ஊழியர்களுக்கு மின்வாகனங்களை ஏற்பாடு செய்து தரவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சஸ்டெய்னபிலிடி மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் சிஎம்எஸ்ஆர் ஆலோசனைக் குழு சார்பில் டெல்லி, மும்பை,புனே, கொல்கத்தா, பெங்களூரு, சென்னைஆகிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மின்னணு மற்றும் உணவு விநியோகநிறுவனங்களின் வழக்கமான வாடிக்கையாளர்கள் 9,048 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், ‘காற்று மாசுபாட்டைக் குறைக்க மின்னணு வர்த்தக நிறுவனங்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பெரிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்தினால், பிற நிறுவனங்களையும் அவ்வாறு மாற்ற முடியும்’ என்று 93 சதவீதத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விநியோகப் பணிகளுக்கு மின்சார வாகனங்களை பயன்படுத்தும் திட்டம் உள்ளதா என்று கேட்டதற்கு, ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ள பதில் வருமாறு:
சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்களை பயன்படுத்துவது அவசியம் எனநாங்கள் நம்புகிறோம். அதன்படி, விநியோகப்பணிகளுக்கான மின்வாகனங்களை படிப்படியாக அதிகரித்து வருகிறோம். அரசின் மின்சாரவாகனக் கொள்கை, வழங்கப்படும் மானியம்போன்றவற்றோடு சார்ஜிங் மையம் போன்ற உள்கட்டமைப்பையும் மேம்படுத்துகிறோம். இவ்வாறு எங்கள் விநியோகஸ்தர்கள், பங்குதாரர்களுடன் இணைந்து மின்சார வாகன பயன்பாட்டை துரிதப்படுத்தி வருகிறோம்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் விநியோகப் பணிகளில் 8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு மின்சார வாகனங்கள் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக டிவிஎஸ், ஹீரோ, ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விநியோகப் பணியில் மின்சார வாகனபயன்பாட்டின் அவசியம் குறித்து ‘பூவுலகின்நண்பர்கள்’ அமைப்பின் சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வரைவு செயல்திட்டத்தில், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் மூலம் 14 சதவீதம் கார்பன் வெளியேற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்துவது அவசியம். எனவே, விநியோகப் பணிகளில் ஈடுபடுவோர் மின்சாரவாகனங்களுக்கு மாறுவதன் மூலம் சென்னையில் வாகனங்களால் ஏற்படும் மாசு 30 - 40சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியை மின்சார வாகனம் வாங்க பயன்படுத்தலாம். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மின்சார வாகனத்தை பயன்படுத்துமாறு அரசும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மின் வாகனங்களுக்கு வரிவிலக்கு: கடந்த 2020, நவ.2-ம் தேதி பிறப்பித்த அரசாணையின்படி, சொந்த பயன்பாடு மற்றும் பொது போக்குவரத்துக்காக பதிவு செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 2022 டிச.31-ம் தேதி வரை, மோட்டார் வாகன வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT