Published : 31 Oct 2022 04:24 AM
Last Updated : 31 Oct 2022 04:24 AM
ஓசூர்: ஜவளகிரி வனச்சரகத்தில் 80 யானைகள் முகாமிட்டுள்ளன. இதையடுத்து, கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனச்சரகத்தில் உள்ள ஜவளகிரி மற்றும் பனை காப்புக்காடு பகுதியில் 80 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராம பகுதிகளில் வலம் வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, “காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் கூறியதாவது: ஜவளகிரி வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள யானைகளை கண்காணிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனவர் தலைமையில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், ஜவளகிரி, பாலதொட்டனப்பள்ளி, அகலக் கோட்டை, முதிகேரி தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் காப்புக் காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் கால்நடை மேய்ச்சல், விறகு சேகரிப்பு, இரவு நேர காவல் பணி, வனப்பகுதி அருகே அதிகாலையில் நடமாடுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
இதுதொடர்பாக ஒலிபெருக்கி மூலமாக கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டமாக வரும் விலங்குகள்: உரிகம் வனச்சரகம் கெஸ்த்தூர் காப்புக்காட்டை ஒட்டிச் செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் பருக கூட்டம் கூட்டமாக வன விலங்குகள் வந்து செல்கின்றன. இதையடுத்து, வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது: கெஸ்த்தூர் காப்புக்காட்டை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் பருக வனவிலங்குகள் கூட்டமாக வருகின்றன. இவற்றை கண்காணித்து வனப்பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்ப மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி உத்தரவின்பேரில், 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் வனவர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர். இக்குழுவினர் காவிரி ஆற்றின் கரையோரங்களில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT