Published : 18 Aug 2017 03:45 PM
Last Updated : 18 Aug 2017 03:45 PM
மண் பத்து கிலோ, சாணம் அரை கிலோ, தேங்காய் மஞ்சியினால் உருவான கம்போஸ்ட் இரண்டு கிலோ, வேப்பம் புண்ணாக்கு நூறு கிராம், எலும்புப்பொடி ஐம்பது கிராம், மைக்ரோ ஊட்டச்சத்து உரம் இருபது கிராம் எனக் கலந்து ஒரு பையில் இட்டு வைத்துள்ளார்கள்.
ஒவ்வொரு பையிலும் மூன்று நாற்றுகள். கத்தரி, தக்காளி, மிளகாய், காலிஃபிளவர், தட்டைப்பயிர் என ஐந்து விதமான நாற்றுக்கள், இப்படி மொத்தம் இருபத்தைந்து பைகளில் இடுபொருட்கள் இடப்பட்டுள்ளன. இந்த இருபத்தைந்து பைகளும் சேர்ந்து அரசு மானிய விலையில் வெறும் ஐநூறு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.
ஆறுகள் பாய்ந்தோடாத, விளைநிலங்கள் இல்லாத நகர்ப்புறப் பகுதிகளில் மாடி வீடுகளில் தோட்டங்கள் போட இவற்றை வாங்கிச் செல்கிறார்கள் என்றால், அதில் அதிசயம் இல்லை. ஆனால் இரண்டு முக்கிய ஆறுகள் தவழ்ந்தோடும் பகுதியில், விவசாயம் மட்டுமே ஜீவாதாரமாக உள்ள பகுதியில், மாடித் தோட்டங்கள் போடுவதற்காக மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள் என்றால் அது நிச்சயம் ஆச்சரியம்தான் இல்லையா?
இந்தக் காட்சியை அட்டப்பாடியில் காணலாம். கேரள மாநிலத்தில் சிறுவாணி, பவானி என இரு ஆறுகள் தவழ்ந்தோடும் பகுதிகளுக்கு இடையில் இருக்கிறது அட்டப்பாடி.
அங்கு ஏன் இப்படி?
“இங்கு நிலவும் வறட்சிதான் காரணம். குறைந்த அளவு நீரில், நமக்குத் தேவையானவற்றை விளைவிப்பதற்காகத்தான் இப்படி!” என்கிறார் தேக்குவட்டை விவசாயி ராதாகிருஷ்ணன். வீட்டுத் தோட்டங்களுக்கான நர்சரி நாற்றுக்களை உருவாக்கிக் கொடுத்துவருகிறார் இவர். இதுகுறித்து அவரிடம் பேசினோம்:
கைகொடுக்கும் நாற்றுப் பைகள்
“இங்குள்ள அகழி, புதூர், சோலையூர் பஞ்சாயத்துக்களில் கடந்த சில வருடங்களாகவே வறட்சி நிலவி வருகிறது. இந்த ஆண்டும் பெயரளவுக்கு மழை பெய்துவிட்டு மறைந்துவிட்டது. எனவே, வருடத்தில் பாதி நாள் ஆற்றில் தண்ணீரே வருவதில்லை. குடிப்பதற்குக்கூட தண்ணீர் பிரச்சினையாக உள்ளது. அதனால் இந்தக் காலகட்டத்தில் போர்வெல் கிணறுகளில், ஆற்றில்கூட குடிநீருக்குத் தவிர வேறு எதற்கும் தண்ணீரை எடுக்கக் கூடாது என்று அரசு அதிகாரிகள் உத்தரவு போடுகிறார்கள்.
அவர்களிடம் போராடித்தான் முறைவைத்து ஆற்றில் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பெரு விவசாயிகளே காய்கறிகளுக்குத் திண்டாடி வருகிறார்கள். அதன் வெளிப்பாடோ என்னவோ நகர்ப்பகுதிகளில் உள்ளதுபோல இங்கேயும் வீட்டுத் தோட்டங்கள், மாடித் தோட்டங்கள் போட மக்களை ஊக்கப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது வேளாண் துறை.
அதற்காக எங்களைப் போன்ற சில நாற்றுப் பண்ணைகளில், காய்கறி நாற்றுப் பைகள் எனப்படும் ‘குரோவ் பேக்ஸ்’ உருவாக்கித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எங்க நர்சரியில் மட்டும் 1,250 நாற்றுப் பைகள் தயாரித்துள்ளோம். இவற்றை அகழியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்துக்குத் தருகிறோம். அவர்கள் அந்தப் பைகளை புதூர், அகழி, சோலையூர் பஞ்சாயத்துக்களில் உள்ள மக்களுக்கு வழங்க உள்ளார்கள். அந்தக் கிராம மக்கள், தங்கள் வசிப்பிடச் சான்று, குடியிருக்கும் வீட்டின் பரப்பளவு போன்ற சில ஆவணங்களைக் காட்டி அந்தப் பைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு மானியத்தில் நாற்றுகள்
இப்படி ஒரு பை தயாரிக்கக் கூலி மட்டும் 15 ரூபாய் செலவாகிறது. பையின் விலை 25 ரூபாய். அதுபோக உரம், வேப்பம்புண்ணாக்கு நாற்றுக்கள், கம்போஸ்ட் என நிறைய செலவு உள்ளது. இப்படி உருவாக்கும் 25 பைகளுக்கு 2,500 ரூபாயை வேளாண் துறை எங்களுக்குத் தருகிறது. அதைப் பெற்று மக்களுக்கு 500 ரூபாய்க்கு அரசு மானியத்தின் கீழ் அளிக்கிறது.
இதன் மூலம் இப்பகுதியின் மக்களுக்கான காய்கறித் தேவையைத் தங்களுக்குத் தாங்களே பூர்த்தி செய்துகொள்வார்கள். வீட்டுத் தோட்டத்துக்குத் தண்ணீரும் குறைந்த அளவே செலவாகும் என்பதால் நீர் சிக்கனமும் இதில் கைகொடுக்கும்!” என தெரிவிக்கிறார்.
இரண்டு முக்கிய ஆறுகள் ஓடிவரும் பகுதிகளில், விளைச்சல் நிலம் மிகுந்த பகுதிகளிலேயே இந்த அளவுக்கு வீட்டுத்தோட்டங்கள் உருவாக்கும் முயற்சியில் கேரள விவசாயிகள் இறங்கி விட்டார்கள் என்றால் சமதளப் பகுதியில், விளைநிலங்களே இல்லாத நகர்ப்புறப் பகுதியில் வாழும் மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள் இந்த விஷயத்தில் எந்த அளவுக்குப் பாய்ச்சல் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வழிகாட்டுதலாகவே அட்டப்பாடி விவசாய முறையை எடுத்துக்கொள்ள வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT