Published : 22 Sep 2018 11:07 AM
Last Updated : 22 Sep 2018 11:07 AM
‘இமயமலை இயற்கையால் தற்செயலாகக் கட்டமைப்புச் செய்யப் பட்ட வெறும் சுவரல்ல. அது தெய்வீக சக்தியால் ஆன்ம நிலையூட்டப்பட்டுள்ளது மட்டுமின்றி இந்தியச் சூழலையும் நாகரிகத்தையும் பாதுகாக்கும் அரணாகும்’
- சுவாமி விவேகானந்தர்
இந்தியாவின் சூழலும் அதன் சூழல் வரலாறும் மிகவும் தொன்மையானவை. கோண்ட்வானா (Gondwana) பெருங்கண்டத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்ததிலிருந்து ஆசியப் பகுதியுடன் மோதி இமயமலையை உருவாக்கும்வரை இந்தியாவின் சூழலில் பல இயற்கையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை பேரூழிக்கால மாற்றங்களால் ஏற்பட்டவையாகும்.
இன்றைய இந்தியா, இமயமலைப் பகுதி, சிந்து – கங்கைச் சமவெளி, தக்கான பகுதியின் மேற்கு - கிழக்கு மலைத்தொடர்களும் சமவெளிப் பகுதியும், அராபிய - வங்கக் கடல்களை ஒட்டியுள்ள கடலோரப் பகுதி என நான்கு நிலவியல் (geological) பகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றின் காரணமாக, இந்தியா 11 சதவீத உயர்ந்த மலைகளாலும், 18 சதவீத நடுத்தர உயர மலைகளாலும், 21 சதவீத குறைந்த உயர, தட்டையான மேட்டு நிலங்களாலும், 43 சதவீதச் சமவெளிகளாலும் ஆக்கப்பட்டுள்ளது. புவியியல் (geographical) அடிப்படையில் காணும்போது, இந்தியா மிகவும் அதிகச் சூழல் வளத்தைப் பெற்றுள்ளது.
வடக்கிலுள்ள, பனிபடர்ந்த மலைப் பகுதிகளிலிருந்து தென்மேற்கில் அமைந்துள்ள வெப்ப மண்டல மழைக்காடுகள் வரையிலும், வடமேற்கில் அமைந்துள்ள வறண்ட தார் பாலைவனத்திலிருந்து, வண்டல் மண் நிரம்பிய சிந்து, கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி போன்ற நதிப்படுகைகள் வரை இந்தியா அதிகச் சூழல் வேறுபாட்டைக் கொண்டுள்ளது. இந்த வேறுபட்ட சூழல்களில் கனிம வளமும் உயிரி வளமும் நிறைந்து காணப்படுகின்றன.
இந்தியாவின் மனிதவளச் சூழல்
சூழல் வேறுபாட்டுக்குத் தக்கவாறு மனிதவளச் சூழலும் இந்தியாவில் நிறைந்து காணப்படுகிறது. கவுக்கசாய்டு, நீக்ரிட்டோ, ஆஸ்ட்ரலாய்டு, மங்கோலியாய்டு மற்றும் நீக்ராய்டு என ஐந்து முக்கிய இன மக்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 461 பழங்குடி இனங்களும், 4,635 தனிப்பட்ட சமூக வகுப்புகளும், 40 முதல் 60 ஆயிரம் அகக்கலப்பு (endogamous) குழுக்களும் அடங்கும்.
மேற்கூறப்பட்ட வெவ்வேறு மானிடப் பண்பாட்டுக் குழுக்கள் மிகவும் வேறுபட்ட வகைகளில் இந்தியாவின் சூழல் வள மூலங்களைப் பயன்படுத்துகின்றன. மேலும், இவை உற்பத்திச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. மூலப் பொருட்களின் மேல் வெவ்வேறு சமூகக் கட்டுப்பாட்டு முறைகளை வெளிப்படுத்துகின்றன.
இந்தப் பயன்பாடு சார்ந்த மனிதக் கலாச்சாரங்கள் வேட்டையாடுதல் - உணவு சேகரிப்பாளர்களை (hunter – gatherers) ஒரு முனையிலும், தொடர் இடமாற்றப் பயிர் செய்பவர்கள் (shifting cultivators), நாடோடி மேய்ச்சல் வாழ்க்கை செய்பவர்கள் (pastoralists) போன்றவர்களுடன், வேளாண்மையில் ஈடுபடுபவர்களையும் கொண்டுள்ளன. இவர்களைத் தவிர பல்வேறு வகைத் தொழில்களில் ஈடுபடுபவர்களும், இயற்கையின் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உயிர் வாழ்பவர்களும் உள்ளனர்.
இயற்கைச் சொத்துகளும் பற்றாக்குறையும்
வெவ்வேறு தொழில்நுட்பச் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் வகையில் மிக அதிக வகையில் இயற்கைச் சொத்துகளும் உள்ளன. தனியாருக்குச் சொந்தமானவை, வட்டாரச் சமுதாயத்துக்குச் சொந்தமானவை (இது பொதுச்சொத்து என்றும் அழைக்கப்படுகிறது), வணிக நிறுவனங்களுக்குச் சொந்தமானவை மற்றும் அரசால் நிர்வகிக்கப்படும் இயற்கைச் சொத்துகள். பொதுச் சொத்துகளில் நிலத்தடி நீர், குளம், ஏரி, ஆறு, பாதுகாக்கப்படாத காட்டுப் பகுதிகள், மேய்ச்சல் புல்வெளிகள் போன்றவை அடங்கும். அரசுச் சொத்துகளில் முக்கியமானவை பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகள் (protected forests) ஆகும்.
ஒரு காலகட்டத்தில் மிகவும் அபரிமிதமாகக் காணப்பட்டு, ஒரு சில மக்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்ளும் வகையிலும், பங்கிட்டுக் கொள்வதில் பெரிய போட்டி இல்லாத வகையிலும் இருந்த இயற்கை வளம் அண்மை ஆண்டுகளில் இவை மிகத் தீவிர இயற்கை மூலப்பொருள் பற்றாக்குறைச் சிக்கலாக உருவெடுத்து வருகிறது.
வேட்டையாடுபவர்களுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்டு வரும் இரைப் பற்றாக்குறையும், தொடர் இடமாற்றப் பயிரிடுதல் மேற்கொள்ளும் பழங்குடிகளுக்கான நிலங்கள் குறைந்து வருவதும், நாடோடி கால்நடை மேய்ப்பவர்களுக்கான மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதும், ஏர் உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள நீர், ஆற்றல், எரிபொருள், தீவனம், உரம், நிலம் போன்றவை குறைவதும், சாமானியர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவை குறைவதும், மென்மேலும் அதிகச் சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்துள்ளன.
இயக்கங்களுக்கு வழிவகுத்த சுரண்டல்
இந்தக் குறைவும், பற்றாக்குறையும் திடீரென ஏற்பட்டவை அல்ல. படிப்படியாகவும் மெதுவாகவும் தடையின்றித் தொடர்ந்தும் ஏற்பட்டு வந்துள்ளன. உதாரணத்துக்கு, 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியப் புவிப்பரப்பில் 65 சதவீதம் பல்வேறு வகைக் காடுகள் இருந்தன என்றும், தற்போது அவை 30 சதவீதத்துக்கும் குறைவாகவே, அதுவும் அதிகம் சிதைந்த நிலையில் இருக்கின்றன என்பதும் அறியப்படுகிறது.
மேற்கூறப்பட்ட மாற்றங்களுக்கு மனிதர்களே பெரும்பாலும் காரணமாகத் திகழ்ந்து வந்துள்ளனர். சூழல் மூலப்பொருட்களின் பற்றாக்குறைகள் பல்வேறு வகைப் பூசல்களையும் மோதல்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கியுள்ளன. ஏனெனில், இந்திய மக்களின் வெவ்வேறு பிரிவுகள் (அதாவது, இந்தியாவின் இயல்புக் குடிமக்களும், காலனியாதிக்க மக்களும்) / சமுதாயங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வந்த இயற்கை மூலப் பொருட்களின் மேல் மென்மேலும் அதிகச் சொந்த / பயன்பாட்டு உரிமைகளையும், கட்டுப்பாடுகளையும் வேண்டத் தொடங்கினர்.
இத்தகைய பூசல்கள், தவிர்க்க முடியாமல், மனித வாழ்க்கைத் தரத்தை மட்டுமின்றி இயற்கைச் சூழலின் தரத்தையும் பெருமளவு பாதித்து வந்துள்ளன. மேலும், இந்தப் பூசல்களில் பல, சூழலையும் அதன் மூலப் பொருட்களையும் பாதுகாப்பதற்காக மட்டுமின்றி, தமக்கு மட்டுமே பயன்படும் வகையில் அவற்றைச் சுரண்டும் மக்களைத் தடுப்பதற்கும், தன்னிச்சையான மற்றும் திட்டமிடப்பட்ட சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் உரிமைப் பாதுகாப்பு இயக்கங்கள் பலவற்றிற்கும் வழி வகுத்தன.
இயக்கங்களை மீள்கொணரும் முயற்சி
சூழல் பாதுகாப்பு, சூழல் உரிமைப் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய இயக்கங்களில் ஒரு சில, இயற்கையின் மேலும் இயற்கை மூலப் பொருட்களின் மேலும் மக்களுக்கு இருந்த அளப்பறியா மரியாதையின் காரணமாக எழுந்தன. மக்கள் அவற்றை, பெரும்பாலும் வருங்காலச் சந்ததிகளுக்கும் கிடைக்கும் வகைகளில், அழியாமல், பயன்படுத்துவதற்கான நீண்ட காலமாக இருந்து வந்துள்ள உரிமைகளை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டன.
வேறு சில, இயற்கை மூலப் பொருட்களையோ அவற்றிலிருந்து பெறப்படும் நன்மைகளையோ மற்றவர்களிடமிருந்து பறித்துக்கொள்ள விரும்பும் வலுவான, சக்தி வாய்ந்த மனிதர்கள் / நிறுவனங்களில் ஒடுக்கச் செயல்களை எதிர்ப்பதற்காகவோ எழுந்தன. இன்னும் சில, மக்கள் தொடர்ந்து எஞ்சி வாழ்வதற்கான சூழல் உரிமைப் போராட்டங்களாக மட்டும் இருந்தன. இந்த இயக்கங்கள் போராட்டங்களாகவோ புரட்சிகளாகவோ சத்தியாகிரகங்களாகவோ இருந்தன.
இந்தத் தொடரின் நோக்கம் இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு சூழல் பாதுகாப்பு இயக்கங்களை மீள் கொணரச் செய்ய முயல்வதும், இந்தியாவின் சூழல் வரலாற்றைப் புரிந்துகொள்வதில் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்தக்காட்ட முயல்வதும்தான். இந்தத் தொடரின் மூலம் இதுவரை திகழ்ந்து வந்துள்ள மனிதச் சூழ்நிலையியலை (human ecology), குறிப்பாக மனிதர் – சூழல் இடைவினையை எடுத்துக்காட்டுவதுதான் எனது குறிக்கோள். இந்தக் களம் பற்றி, தமிழில் அதிக அளவு படைப்புகள் இல்லை.
ஆனால் ஆங்கிலத்தில், ராமச்சந்திர குஹா, மாதவ் காட்கில், ரொமிலா தாப்பர், மகேஷ் ரங்கராஜன், கே.சிவராமகிருஷ்ணன், ரிச்சர்டு குரோவ், ஹெய்மெண்டோர்ஃப், ஏ.அய்யப்பன், வெர்ரியர் எல்வின், டேவிட் அர்னால்டு, ஜே.சி.ஸ்காட், ஏ.ராமன் போன்றோரின் படைப்புகளும், நூற்றுக்கணக்கான இதர கட்டுரைகளும் இத்துறை சார்ந்து விரிவாக எழுதப்பட்டுள்ளன.
(தொடரும்)
கு.வி.கிருஷ்ணமூர்த்தி, கட்டுரையாளர்,
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT