Published : 15 Nov 2025 12:48 PM
Last Updated : 15 Nov 2025 12:48 PM
பழநி: கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கொடைக்கானல் வனப் பகுதியில் அரியவகை மூலிகை கள், குங்குலியம், சில்வர் ஓக், ரோஸ் உட், வேங்கை உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், அதற்கு நேர் மாறாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் சமீபகாலமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெற்று, அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்தும் மரங்களை வெட்டி வருகின்றனர். அவ்வாறு வெட்டிய மரங்களை சாலையோரம், பட்டா நிலம் மற்றும் வனப்பகுதிக்கு உள்ளே பதுக்கி வைக்கின்றனர்.
பின்னர், இரவில் லாரிகளில் வத்தலக்குண்டு, தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழநி வழியாகக் கொண்டு செல்கின்றனர். பட்டா நிலத்தில் 100 மரங்களை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு, அதற்கு மேல் மரங்களை வெட்டுகின்றனர். இதனை, வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. கொடைக்கானலில் மரங்களை வெட்டி அழிப்பது, விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டு காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் நகர் பகுதிக்கு வருகின்றன. சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக விவசாயம், வனங்களை நம்பியுள்ள உயிரினங்களும் பாதிக்கின்றன. மரங்கள் இல்லாததால் மழை குறைந்து, குடிப்பதற்கும், பாசனத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் போகும். எனவே, கொடைக்கானலில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப்பகுதி யில் அனுமதி அளித்ததை விட அதிகமாகவும், அனுமதி இல்லாமலும் மரங்களை வெட்டி வருகின்றனர். தனியார் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதாகக் கூறி, வனப்பகுதியில் உள்ள மரங்களும் வெட்டி கடத்தப்படுகின்றன. பட்டா நிலத்தில் ஒரு மரம் வெட்டினால், அதற்கு இணையாக 10 மரக்கன்றுகள் வைக்க வேண்டும். ஆனால், மரக்கன்று வைப்பதில்லை.
இதே நிலை தொடர்ந்தால், கொடைக்கானல் வனப்பகுதியே அழிந்துவிடும். மரங்கள் வெட்டப்படுவதால் மலைக்கிராமங்கள் மட்டுமின்றி மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைகள், அணைகளுக்கு தண்ணீர் தடைப்படும் சூழல் உருவாகி வருகிறது.
கொடைக்கானல் வன உயிரினச் சரணாலயம் என்று கூறும் வனத்துறையினரோ, வனம் மற்றும் அதனை சார்ந்த உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான மரங்களை பாதுகாப்பதில் கோட்டை விடுகின்றனர். விதிமீறல்கள் குறித்து ஏனோ வனத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. வேட்டைத் தடுப்பு காவலர்கள் மூலம் விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பது போல், மரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT