Published : 11 Nov 2025 08:19 PM
Last Updated : 11 Nov 2025 08:19 PM
மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டங்களை நடத்துவது ஜனநாயக நாட்டில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், ‘மூச்சு முட்டுது; கொஞ்சம் சுத்தமான காற்று கிடைக்குமா..?’ என ஆட்சியாளர்கள் கவனம் ஈர்க்க ஒரு பெருங்கூட்டம் தலைநகரில் கூடியது வேதனையான காட்சி. அதுமட்டுமல்ல, டெல்லி ‘இந்தியா கேட்’ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம், காற்று மாசுபாட்டால் தலைநகர் எப்படித் திணறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.
டெல்லியில் காற்று மாசு, அதுவும் குளிர்காலத்தில் நிலவும் காற்று மாசுபாடு சமீப காலமாக முக்கிய பேசுபொருளாகத்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் வரை கொட்டிக் கிடக்கும் வழக்குகள், உள்ளூர் தொடங்கி உலக ஊடகங்கள் வரையிலான் விவாதங்கள் என எல்லாம் பழைய கதையாகிவிட, மக்களின் விநோதப் போராட்டம் அந்தப் பிரச்சினையின் ஆழத்தின் சாட்சி! கூடவே, அடுத்தடுத்த அமைந்த ஆட்சிகளும், மத்திய அரசும் தோற்றுவிட்டன என்பதையும் அப்பட்டமாக தோலுரித்துள்ளது என்கின்றனர் சூழலியர் செயற்பாட்டாளர்கள்.
‘சுவாசிப்பதற்கான உரிமை இருக்கிறதல்லவா?...’ - வழக்கமான ஞாயிறு மாலை. வழக்கமான காற்று மாசு. இருந்தாலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, சூழலியல் செயற்பாட்டாளர்கள் முதல் தன்னார்வலர்கள் வரை நிறைய பேர் தலைநகரில் திரண்டிருந்தனர். அனைவரின் கோரிக்கையும், “இந்த தேசத்தில் சுவாசிப்பதற்கான உரிமை இருக்குதானே. அதை எங்களுக்கு உறுதி செய்யுங்கள்” என்பதாகவே இருந்தது.
அங்கு திரண்டிருந்தவர்களில் 33 வயதான ராதிகா அகர்வால், “டெல்லி இனி வாழத் தகுதியற்ற நகரம். இது ஒரு மரணப் பொறி. நான் இங்கே, இந்த நொடி சுவாசிக்கும் காற்று என்னை மறைமுகமாகக் கொன்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த காற்று மாசுபாட்டைத் தடுக்க எதுவுமே செய்யாத அரசைத்தான் நாங்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்கிறோன். காற்று மாசை தடுக்க கொள்கையும் இல்லை; உண்மையான நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் நான் இங்கே இன்று போராட நிற்கிறேன்” என்றார்.
“கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு மாதங்கள், ஏதோ பருவமழைக்காலம் போல் இப்போதெல்லாம் இயல்பாக்கப்பட்டுவிட்டது. மழை முன்னெச்சரிக்கை போல் காற்று மாசுபாட்டை முன்னெச்சரிக்கையோடு அணுக நாங்கள் பழக்கப்பட்டிருக்கிறோம். இதுவல்ல தீர்வு” என்று இன்னொருவர் கூறினார்.
‘ஒரு கேஸ் சாம்பர்’ - கடந்த சில நாட்களாக டெல்லி காற்றின் தரம், சர்வதேச சுகாதார அமைப்புகள் பாதுகாப்பானது எனப் பரிந்துரைத்துள்ள அளவைவிட மிக மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் வாழ்வது வரவர ஒரு கேஸ் சாம்பருக்குள் இருப்பது போன்றதாகிவிட்டது என்று இன்னும் சிலர் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர். இப்போதெல்லாம் டெல்லியில் உடல் பருமன், சர்க்கரை நோயால் உயிரிழப்போரைவிட காற்று மாசுபாட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு முதல்நாளே போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் பலரையும் போலீஸ் நேரில் சந்தித்து, போராட்டத்தை வாபஸ் பெறுமாறும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும், துணிச்சலுடன் போராட்டத்துக்கு வந்திருந்த சவுரவ் தாஸ் (26), தனக்கு புகைப்பிடித்தல் போன்ற எந்தவொரு பழக்கமும் இல்லாவிட்டாலும் கூட தனக்கு அலர்ஜிக் ப்ரான்கைட்டிஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு காற்று மாசுபாடுதான் காரணம் என மருத்துவர் சொன்னதாவும் கூறினார்.
“நாங்கள் இங்கே இன்று அறவழியில் திரண்டுள்ளோம். காற்று மாசுபாட்டை தடுக்கத் தவறிய அரசுகளுக்கு எதிராக வலுவான குரலை பதிவு செய்ய வந்துள்ளோம்.” என்றார்.
ஆனாலும், அந்தப் போராட்டத்தை குறைவான நேரத்திலேயே காவல் துறை முடிவுக்குக் கொண்டு வந்தது. மறுநாள் அதை ஒருங்கிணைத்த பலர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இது காற்று மாசு காலம்... - போராட்டக்காரர் ஒருவர், பருவமழைக் காலம் போல் காற்று மாசுக் காலமும் டெல்லியில் இருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு குளிர் காலத்திலும் காற்று மாசு பல மடங்கு டெல்லியில் அதிகரிக்கிறது. இதற்கு விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அண்டை மாநிலங்களில் இருந்து கிளம்பும் புகை, தலைநகரில் பெருத்துக் கிடக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து வரும் புகை மற்றும் நகர திடக்கழிவு மேலாண்மை நிறுவனங்கள் கழிவுகளை எரிப்பதால் கிளம்பும் புகை, நிலக்கரியை கொண்டு இயங்கும் மின் ஆலைகள், குளிருக்கு இதமாக மூட்டப்படும் தணலில் இருந்து கிளம்பும் புகை எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
காரணங்கள் அடுக்கடுக்காக இருந்தாலும், அவற்றைத் தீர்க்க அரசாங்க கொள்கை என்று தேடிப் பார்த்தால் எதுவும் இல்லை என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். வசதி வாய்ப்புள்ளவர்கள் வீடுகளில் ஏர் ப்யூரிஃபையர்கள் பொருத்துகின்றனர். இன்னும் சிலர் கோடை விடுமுறை போல் காற்று மாசு கால விடுமுறையாக வெளி மாநிலம் சென்று விடுகின்றனர். இப்போது டெல்லியில் மிக மிக ஆடம்பரப் பொருள் என்றால், அது சுத்தமான காற்றுதான். அது சுமார் 3 கோடி டெல்லிவாசிகளுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்கின்ற்னர். ஆட்சி மாறியும் காட்சி ஏதும் மாறவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த தீபாவளியன்று பசுமைப் பட்டாசுக்கு டெல்லியில் அனுமதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து காற்று மாசு இன்னும் மோசமாக, கிளவுட் சீடிங் (மேக விதைப்பு) மூலம் செயற்கையாக மழையை பெய்யவைத்து காற்றை சற்றே சுத்தப்படுத்தலாம் என்ற முயற்சியை கையிலெடுத்தது. ஆனால், அது பலனளிக்கவில்லை.
“காற்று மாசிலிருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் இருப்பதுபோல், காற்றை சுத்தமாக்கித் தரும் மாஸ்க் எங்கேயாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறேன். வேறு எந்த மாநிலத்திலாவது இந்த அளவுக்கு காற்றின் தரம் மோசமாக இருந்திருந்தால், அந்த மாநில அரசு இந்நேரம் அவசரநிலை பிரகடனப்படுத்தி இருக்கும்” என்று 33 வயது பெண் ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார்.
என்ன சொல்கிறது டெல்லி அரசு? - போராட்டம் ஒருபுறம், களத்தின் உண்மை நிலவரம் விடும் சவால் என சிக்கிக் கொண்டுள்ள டெல்லி அரசு மவுனம் கலைத்துள்ளது. டெல்லி அமைச்சர் ஆசிஷ் சூட் அளித்த ஊடகப் பேட்டியில், “அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவு எரிக்கப்படுவது, காலநிலை மாற்றம், வாகனப் புகை எனப் பல காரணங்களால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்று தரக்குறியீடு 350-ஐ கடந்தால் 3-ம் நிலை கிராப் கட்டுப்பாடுகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை நினைவில் கொண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
“எதுவாக இருப்பினும், சுவாசிக்கும் காற்றுக்காகவெல்லாம் போராட்டம் நடக்கும் சூழல் நிச்சயமாக ஆட்சியாளர்களின் படு தோல்வி” என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT