Published : 05 Nov 2025 05:36 PM
Last Updated : 05 Nov 2025 05:36 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கவரிச்சாவடி (சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை) அருகே வராக நதி ஆற்று பாலத்தின் மீது சாலையோரத்தில் இன்று (நவ.5) அதிகாலை 2.30 மணியளவில் சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து லாரி ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டனர். இதில் சிறுத்தையின் தலை மற்றும் 2 கால்களில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது.
மேலும், உயிரிழந்து கிடந்தது 3 வயது ஆண் சிறுத்தை என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். பின்னர், வராக நதியின் கரையோரம், விக்கிரவாண்டி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருக்கிறதா என ஆய்வு செய்தனர். கால் தடமும் சிக்கவில்லை, கால் பாதங்களில் மண்ணும் படிந்திருக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருக்லாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்று பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதி இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. எனவே, வேறு இடத்தில் சிறுத்தையை அடித்து கொலை செய்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலையில் ஏன்? வீசிவிட்டு சென்றிருக்கக் கூடாது என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “திண்டிவனம், மயிலம், கண்டாச்சிபுரம், திண்டிவனம், கூட்டேரிப்பட்டு பகுதியில் கடந்த 8 மாதங்களில் மர்ம விலங்கு கடித்து சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. மாடுகளும் பலியாகி இருக்கிறது. இதற்கிடையில், சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ஒரு சிலர் பார்த்ததாகவும், சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.
இது வதந்தி என வனத்துறையினர் மறுத்தனர். சிறுத்தைக்கு வாய்ப்பில்லை என்றும், வேறு எதாவது விலங்காக இருக்கலாம் என விளக்கம் அளித்தனர். மக்கள் தெரிவித்த தகவலை அலட்சியப்படுத்தாமல், கண்காணிப்பை வனத்துறையினர் தீவிரப்படுத்தி இருந்தால், சிறுத்தை நடமாட்டம் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கலாம்” என்றனர்.
விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறும்போது, “விக்கிரவாண்டி சுங்கவரிச் சாவடி அருகே சிறுத்தை இறந்து கிடப்பதாகதான் தகவல் கிடைத்தது. உயிரிழந்து கிடந்தது 3 வயது ஆண் சிறுத்தை. சிறுத்தையின் உடலை கைப்பற்றி உள்ளோம். எனது முன்னிலையில், 2 கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து, சிறிய பாகம் கூட வெளியே செல்லாமல், வனப்பகுதியில் எரிக்கப்படும்.
பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். சிறுத்தையின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் தான் மேலகொந்தை வனப்பகுதி உள்ளது. சிறுத்தை எப்படி வந்தது தெரியவில்லை. இதன் உயிரிழப்பும் எவ்வாறு என தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும்” என்றார்.
விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறும்போது, “1962-ல் வெளியிடப்பட்ட தென்னாற்காடு மாவட்ட ஆவணத்தில் விழுப்புரம் அடுத்த உடையாநத்தம் பகுதியில் 1,602 ஏக்கர், மேலக்கொந்தையில் 480 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வன விலங்குகள் நடமாட்டம் குறித்து தெரிவிக்கவில்லை. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் இறந்து கிடந்த சிறுத்தை, இப்பகுதிக்கு உரியதாக இருக்கவும் வாய்ப்பில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி, சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து விழுப்புரம் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT