Published : 02 Nov 2025 10:25 AM
Last Updated : 02 Nov 2025 10:25 AM

சென்னை கிண்டியில் 118 ஏக்கரில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், நீர்நிலைகளின் கரைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக் கலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசுக்கு சொந்தமான சென்னை, கிண்டியில் அமைந்துள்ள நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் அது தொடர்பான பணிகளை அமைப்பதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கடந்தாண்டு செப்.20 ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு 118 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியை பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் உள்ள இந்நிலத்தில், பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவத்தினை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இப்பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் அமைக்கப்பட உள்ள நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக, அவ்வளாகத்துக்குள் வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு. தலைமைச்செயலர் நா.முருகானந்தம், மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து, கிண்டி வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைவது தொடர்பாக, முதல்வருக்கு வேளாண்துறை செயலர் தட்சிணா மூர்த்தி விளக்கினார். இதையடுத்து, சுற்றுச்சூழல் பூங்கா தொடர்பான கல்வெட்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கு பல்வேறு நாற்றாங்கால்கள், செடிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை அமைச்சர், அதிகாரிகளுடன் சேர்ந்து பார்வையிட்டார். தொடர்ந்து, அந்த வளாகத்தில் மரக்கன்றை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடவு செய்தனர்.

பின்னர் விழா மேடைக்கு முதல்வர் சென்ற முதல்வர், கிண்டி வளாகத்தில் உள்ள குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது. அதில், பூங்கா எவ்வாறு அமைய உள்ளது. என்னென்ன வசதிகள் இந்த பூங்காவில் அமைக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்து, குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார். இதற்காக அமைக்கப்பட்ட மேடை போன்ற பகுதியில் ஏறி முதல்வர் பார்வையிட்ட போது, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் பணிகளை விளக்கினார்.

இந்நிகழ்வில், எம்எல்ஏக்கள் கணபதி, பிரபாகரராஜா, அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மு. மகேஷ் குமார், இந்துஎன். ராம், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா, நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, வேளாண்துறை இயக்குநர் பி.முருகேஷ்., தோட்டக்கலைத்துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்ட அறிக்கை தயாரிப்பு: கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கும் திட்டத்துக்கு, ரூ.25 கோடி செலவில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) உருவாக்க கலந்தாலோசகரை நியமிக்க தோட்டக்கலைத் துறை கடந்த ஜூன் மாதம் டெண்டர் கோரியது. அந்த விரிவான திட்டத்தில், மலர் தோட்டங்கள் அமைத்தல், 3D காட்சிகள் அமைத்தல், நடைபாதைகள், பிளாஸ்டிக் இல்லாத பசுமை காடுகள், குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், உள்நாட்டு மரங்களை வளர்த்தல் போன்ற வசதிகள் இடம்பெறுமாறு தயாரிக்க தோட்டக் கலை துறை அறிவுறுத்தி, அதன்பேரில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x