Published : 29 Oct 2025 06:30 AM
Last Updated : 29 Oct 2025 06:30 AM
சென்னை: ‘ராம்சார் தலம் அமையும் நிலங்கள் வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக, பாஜக, அதிமுக தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையி்ல், இதுதொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 1971-ம் ஆண்டு ராம்சார் தல, சட்ட செயல்முறையின்படி, 2017-ம் ஆண்டு ஈரநிலங்கள் விதிகளின்கீழ், சதுப்பு நிலம் என்பது, சதுப்பு நிலம் அல்லது காப்புக்காடு, ராம்சார் தலம், ஈர நிலம் என 3 வகையாக அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ், பள்ளிக்கரணை பகுதியில், 698 எக்டேர் பரப்பு, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக் காடாக 2007-ல் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதிஅளிக்கப்படுவதில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1,248 எக்டேர் பரப்பில் பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காட்டில் உள்ள 698 எக்டேர் நிலமும், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 எக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும். ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள நிலப்பகுதிகளை சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, சுட்டிக்காட்டப்பட்டு வரும் கட்டுமானம் குறித்த நிலத்தின் புல எண்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இத்தகைய தனியார் பட்டா நிலங்கள் ஆகும். குறிப்பிட்ட சர்வே எண்களுடன் எல்லைகளை வரையறுக்கும் பணி, மத்திய அரசாங்க நிறுவனமான, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்திடம் கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மையம், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்துக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இம்மேலாண்மைத் திட்டமானது, சர்வே எண்களின் அடிப்படையில் எல்லைகளை வரையறுத்தல், டிஜிட்டல் வரைபடத்தில் நிலப் பயன்பாடு, ஈரநில பாதுகாப்பு விதியின் கீழ் அனுமதிக்கப்பட வேண்டிய அல்லது ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய செயல்பாடுகளின் பட்டியலை தயாரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும், ஈரநிலங்கள் விதிகள், 2017-ஐ செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலில், ராம்சார் தலத்தை அறிவிக்கும் செயல்முறை, ராம்சார் தலத்துக்குள் உள்ள சர்வே எண்கள் உட்பட வரைபடம் மற்றும் திட்டத்தை பொது களத்தில் வைப்பதாகும்.
மேலும், ராம்சார் தலமாக அறிவிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக, இதனை 60 நாட்களுக்குள் ஒரு பொது ஆலோசனைக்கு உட்படுத்துவது என்ற செயல்முறையும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆட்சேபனை தெரிவிக்கும் நபர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அல்லது பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை நிவர்த்தி செய்ய மாநில அரசுக்கு 240 நாள் காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரமற்றவை: எனவே, ஈரநில விதிகளின்படி பள்ளிக்கரணை ஈரநில அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்கள் பட்டா நிலங்கள் என்பதால், செய்தித்தாள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ராம்சார் தல எல்லை வரையறையானது, குறிப்பிட்ட சர்வே எண்களுடன் ஒப்பிட்டு பரப்பளவை வரையறுப்பது, நில உண்மை கண்டறிதல் சோதனை மற்றும் அறிவிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
ராம்சார் தலம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT