Published : 22 Oct 2025 07:04 AM
Last Updated : 22 Oct 2025 07:04 AM
சென்னை: தீபாவளி பண்டிகையன்று காற்று மற்றும் ஒலி மாசு குறைந்த பகுதியாக பெசன்ட் நகரும், அதிகரித்த பகுதிகளாக வளசரவாக்கம், திருவொற்றியூரும் கண்டறியப்பட்டதாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையிலும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தப்பட்டது.
பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவைக் கண்டறிய தமிழகம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காற்று மாசு ஆய்வுகள் 39 இடங்களிலும், ஒலி மாசு ஆய்வுகள் 34 இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, தீபாவளியான அக்.20 காலை 6 மணிமுதல் மறுநாள் அக்.21 காலை 6 மணிவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்று தர குறியீடு பெசன்ட் நகரில் மிதமான அளவாக 190 ஆக இருந்தது. ஆனால், மிக மோசமான அளவாக வளசரவாக்கத்தில் 332 வரை உச்சபட்ச காற்று தர குறியீடு கண்டறியப்பட்டது. இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அளவீடு செய்யப்பட்டது.
மேலும், தீபாவளி பண்டிகையன்று அக்.20 மாலை 6 மணிமுதல் இரவு 12 மணிவரை குறைந்த ஒலி மாசு பெசன்ட் நகரில் 62.8 டெசிபல் அளவாக பதிவானது. அதிகபட்ச ஒலி அளவு திருவொற்றியூரில் 88.4 டெசிபல் அளவாக பதிவாகியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையன்று கண்டறியப்பட்ட காற்று மற்றும் ஒலி மாசு அளவுகள், வரையறுக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற காற்று மற்றும் ஒலி மாசின் அளவுகளை விட அதிகமாக இருந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT