Published : 22 Oct 2025 06:13 AM
Last Updated : 22 Oct 2025 06:13 AM
சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் 225.87 டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு வழக்கத்தை விட தமிழகத்தில் அதிகளவில் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசு வெடித்து சென்னை மக்கள் இந்த தீபாவளியை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த அக்.19, அக்.20 மற்றும் அக்.21 ஆகிய 3 நாட்களில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 225.87 டன் பட்டாசு கழிவுகளை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி அழிப்பதற்காக கும்மிடிப்பூண்டி மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 24.08 டன் கழிவும், கோடம்பாக்கம் - 20.45 டன், தேனாம்பேட்டை-19.84 டன், திருவிக நகர்-17.70 டன், தண்டையார்பேட்டை திருவொற்றியூரில் 17.33 டன், ஆலந்தூர் மண்டலத்தில் 13.09 டன், பெருங்குடி மண்டலத்தில் 12.33 டன், ராயபுரம் மண்டலத்தில் 11.95 டன் கழிவுகளும் மாநகராட்சி பணியாளர்களால் இரவு, பகலாக அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் மிக குறைந்தபட்சமாக அண்ணா நகரில் 7.18 டன பட்டாசு கழிவு சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT