Published : 13 Oct 2025 06:06 AM
Last Updated : 13 Oct 2025 06:06 AM
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்காக 40 மெகாவாட் சோலார் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பசுமை எரிசக்தி கழகம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் தினமும் பகல் நேர மின்சாரத் தேவைக்கு ஏற்ற திறனுடன் சோலார் பேனல் அமைக்க அரசு கடந்த 2023-ம் ஆண்டு முடிவு செய்து, அதற்கான திட்டத்தை அறிவித்தது. சில அரசு அலுவலகங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.
டெண்டருக்கு அக்.27 கடைசி: இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களிலும் தலா 40 மெகாவாட் திறனுடைய சோலார் கட்டமைப்புகளை நிறுவ தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் திட்டமிட்டது. முதல்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மட்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15 முதல் 27-ம் தேதிவரை நிறுவனங்கள் தங்களது டெண்டரை சமர்ப்பிக்கலாம். அக்.28-ம் தேதி டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படும்.
இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்களில் சோலார் மின்சார கட்டமைப்புகளை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற கட்டிடங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சென்னையில் பல இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறோம். 5 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகிற, அதிக மின்சாரத் தேவை உள்ள அரசு கட்டிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
25 ஆண்டு பராமரிப்பு: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களில், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு குறைந்த விலை கோரும் நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்படும். அந்த நிறுவனம் தனது செலவில் மின் நிலையம் அமைத்து, 25 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். மாதம்தோறும் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கான விலையை கணக்கிட்டு, பசுமை எரிசக்தி கழகம் வழங்கும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அரசு அலுவலகங்களுக்கு மின் கட்டண செலவு 40-50 சதவீதம் வரை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT