Published : 10 Oct 2025 01:03 PM
Last Updated : 10 Oct 2025 01:03 PM
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 47 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்பகுதிகளில் பேட்டரி கார்களை இயக்குவது குறித்தும் தமிழக அரசு பதிலளிக்க அறிவுறுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை மூடக்கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனரான கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், இந்த புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் சூழலில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை திருவிழாவில் பங்கேற்பர். அந்த வாகனங்களால் எழுப்பப்படும் ஒலி மாசு வனவிலங்குகளுக்கும், வனத்தின் சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த திருவிழாவுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளையும் மூட உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் திருவிழாவுக்கு 100 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். விழா நாட்களில் மட்டும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்க அனுமதிக்கலாம். ஆடுகள் பலியிடப்பட்டதும் அந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், வன விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம், ‘‘ஆண்டுதோறும் இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையும், பலியிடப்படும் ஆடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆடுகளின் கழிவுகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் வி்டுவதால் கடுமையான துர்நாற்றம் பரவுகிறது. யானைகள் நடமாட்டம் இருப்பதால் இரவில் பக்தர்கள் தங்க அனுமதிக்கக்கூடாது, என்றார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான அரசு ப்ளீடர் ஏ. எட்வின் பிரபாகர், கடந்தாண்டு குறைந்த எண்ணிக்கையில் தான் பக்தர்கள் வந்தனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது, என்றார். அதையடுத்து நீதிபதிகள், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் செயல்படும் 47 சட்டவிரோத ரிசார்ட்டுகளை உடனடியாக மூட அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் கோயில் திருவிழா நேரங்களில் பேட்டரி கார்களை இயக்குவது குறித்தும், சட்டவிரோத ரிசார்ட்டுகளை மூடியது குறித்தும் தமிழக அரசு 4 வார காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT