Published : 30 Sep 2025 01:40 PM
Last Updated : 30 Sep 2025 01:40 PM

செங்கழுத்து உள்ளான்... நஞ்சராயன் குளத்தில் முதல் முறையாக தஞ்சம்!

திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு முதல்முறையாக, செங்கழுத்து உள்ளான் பறவை வந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கூலிபாளையம் பகுதியில் 420 ஏக்கரில் நஞ்சராயன் குளம் உள்ளது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வலசை வரும் வெளிநாட்டு பறவைகளும், இங்கு வந்து தங்கிச்செல்கின்றன. இதனால், இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த குளத்தை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து, இதன் மேம்பாட்டுப் பணிக்காக ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் குளிர்கால வலசை அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறும். தற்போது நஞ்சராயன் குளத்தில் புதிய வரவாக ஆர்க்டிக் துருவப்பகுதியில் காணப்படும் செங்கழுத்து உள்ளான் பறவை தஞ்சமடைந்துள்ளது. குளிர்கால வலசையாக இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு நாடுகளுக்கு இப்பறவை வலம் வரும்.

சமீபத்தில் கோவை, மதுரை மற்றும் சென்னையிலும் வலம் வந்த இப்பறவை, வலசை செல்லும் வழியில் திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு முதல்முறையாக வந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் அதிகளவில் செங்கழுத்து உள்ளான் உலா வரும். உள்நாட்டு நீர்நிலைகளில் இளைப்பாறவும், உணவு தேடியும் திருப்பூரில் முதல்முறையாக முகாமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர் மணிகண்டன் உதவியுடன், திருப்பூர் இயற்கை கழகத்தின் ரவீந்திரன் காமாட்சி, நந்தகோபால் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், இப்பறவையை கேமராவில் பதிவு செய்தனர்.

திருப்பூர் இயற்கை கழகத்தின் ரவீந்திரன் காமாட்சி கூறும்போது, “நஞ்சராயன் குளத்துக்கு வரும் பறவை இனங்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. சுழன்று, சுழன்று தண்ணீரை இறக்கையால் அடித்து, அதில் கிடைக்கும் நுண்ணுயிர்களை சாப்பிட்டு உயிர் வாழ்பவை செங்கழுத்து உள்ளான். இப்பறவை, இறக்கையை கொண்டு தண்ணீரை வேகமாக அடிப்பதை பார்ப்பதே தனி அழகாகும். ஒரு வாரம் வரை இங்கு இருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x