Published : 20 Sep 2025 08:28 PM
Last Updated : 20 Sep 2025 08:28 PM
கோவை: கோவை அருகே மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, ‘ரோலக்ஸ்’ என்ற காட்டு யானை தாக்கியதில் கால்நடை மருத்துவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ‘ரோலக்ஸ்’ எனப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை நரசீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்த யானையை பிடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த யானையை பிடித்து அப்புறப்படுத்த டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் கடந்த வாரம் வரவழைக்கப்பட்டு, நரசீபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டன.
பொதுமக்களை அச்சுறுத்தும் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தேவையான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த இந்த யானையை கெம்பனூர் பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வந்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன், ஓய்வு பெற்ற வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் இதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள வாழைத் தோட்டத்தில் ‘ரோலக்ஸ்’ யானை நின்று கொண்டிருந்தது. இதையறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், வெண்ணிலா, மனோகரன் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்தனர்.
அப்போது வாழைத்தோட்டத்தில் இருந்து வெளியே வந்த யானைக்கு, மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார். இதனால் ஆவேசமான ரோலக்ஸ் யானை, மருத்துவர் விஜயராகவனை நோக்கி வந்தது. அவர் சுதாரித்து தப்பிப்பதற்கு முன்னர் யானை தனது தும்பிக்கையால் அவரை கீழே தள்ளி தாக்கியது. தொடர்ந்து வனத்துறையினர் சத்தம் எழுப்பியதால் யானை அங்கிருந்து சென்றது. யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
வனத்துறையினர் அவரை மீட்டு, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். யானை தள்ளிவிட்டு தாக்கியதில் விஜயராகவனுக்கு முதுகில் லேசான எலும்பு முறிவும், இடது கை விரலில் காயமும் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT