Published : 20 Sep 2025 03:33 PM
Last Updated : 20 Sep 2025 03:33 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 402.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இக்காடுகள் தான் பல்வேறு வற்றா நதிகளின் பிறப்பிடமாக திகழ்கின்றன. வனபரப்புகளை ஆக்கிரமித்துள்ள மியூக்கோனா என்னும் வள்ளிச் செடிகளால் மரங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குமரி மாவட்ட வனப்பகுதியில் அரசு ரப்பர் கழகம் சார்பில் ரப்பர் மரங்கள் பயிரிட்டபோது களைச்செடிகள் வளருவதை தடுக்கும் நோக்கத்தில் வள்ளிச்செடிகள் இறக்குமதி செய்யப்பட்டு நடப்பட்டன.
வேகமாக பரவி வளரும் இச்செடிகளால் களைச்செடிகள் கட்டுப்படுத்தப்பட்டன ஆனால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தவன் கதையைப் போல இவை மரங்களிலும் பற்றி படர்ந்து அழித்து வருகின்றன. இதனால் குலசேகரம், கோதையாறு, கொடுத்துறை, மூக்கறைக்கல், மல்லமுத்தன்கரை, கிளவியாறு, தச்சமலை, சிற்றாறு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை கபளீகரம் செய்த வள்ளிச்செடிகளால் இப்பகுதி வனங்கள் அழியும் நிலைக்கு சென்று விட்டன.
மேலும் வள்ளிச் செடிகளால் வனங்களில் உள்ள மூலிகைச் செடிகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த செடிகளும் அழிந்து போகி்ன்றன. வனவிலங்குகள் இச்செடிகளை இரையாக உட்கொள்ளும் போது மலட்டு தன்மை அடைந்து அழிந்து வருகின்றன. பூமியில் உள்ள இச்செடிகளின் கிழங்குகள் மூலம் எளிதில் அதிகமாக செடிகள் உருவாவதால் இதன் பரவலை கட்டுப்படுத்தவே முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.
களைக் கொல்லியாக நடப்பட்ட இச்செடிகள் தற்போது வனக்கொல்லியாக உருமாறி குமரி மாவட்ட வனங்களுக்கும், பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் எதிராக பச்சை ஆக்டோபஸாக பரிணாமம் எடுத்து உள்ளது. சுற்றுசூழலுக்கும், நீர் ஆதாரத்துக்கும் அடிப்படையாக திகழும் குமரி மாவட்ட வனப்பகுதியை அழித்து வரும் வள்ளிச்செடிகளை முழுமையாக அகற்றிட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT