Published : 20 Sep 2025 05:56 AM
Last Updated : 20 Sep 2025 05:56 AM
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) சென்னை வளாகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) சார்பில் "தென்னிந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி பேசியதாவது: வாகன உதிரிபாக உற்பத்தி, ஜவுளி, தோல், சர்க்கரை மற்றும் அதன் உப பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 40% பேர் தமிழகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள் உள்ளன. அவற்றில் காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் பாலாறு நமது விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்துக்கு உயிர்நாடியாக உள்ளது. தமிழக கடற்கரை 1076 கிமீ நீளம் கொண்டது.
இதில் ஏராளான கழிமுகங்கள், பவளப்பாறைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமான மன்னார் வளைகுடாவும் இங்கு தான் அமைந்துள்ளது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களும், விலங்கினங்களும், கடல் பசு போன்ற அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களும் வாழ்கின்றன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான (20 இடங்கள்) ராம்சார் ஈர நிலங்களும் தமிழகத்தில் தான் உள்ளன.
பெரும் சவால்: இவற்றின் பாதுகாப்புக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க, `மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறது. மேலும் பசுமை தமிழ்நாடு இயக்கம், ஈரநில இயக்கம், கடலோர சீரமைப்பு இயக்கம், இவற்றை செயல்படுத்த `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்' ஒன்றையும் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர் இயக்குநர் எஸ்.வெங்கட மோகன், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவன (SERC) இயக்குநர் என்.ஆனந்தவள்ளி, முன்னாள் சிஎஸ்ஆர் இயக்குநர் சுகுமார் டிவோட்டா, கேரளா மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் எஸ்.கலா, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் என்.ரமேஷ், எல் அன்டு டி நிறுவன துணைத் தலைவர் கே.ரஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT