Published : 18 Sep 2025 05:07 PM
Last Updated : 18 Sep 2025 05:07 PM
கூடலூர்: குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். நீலக்குறிஞ்சி என்ற இந்த வகைப் பூக்கள் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள வனப் பகுதிகளில் பூக்கும்.
ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா என்ற அறிவியல் பெயர் கொண்ட அரிய தாவரமான நீலக்குறிஞ்சி, கூடலூர் தாலுகா ஓவேலி வனப் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூத்திருக்கிறது. இதை வனத் துறையினர் கண்டுபிடித்து, அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிஞ்சி மலர்களின் புகைப்படங்களை வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் போது ஒட்டுமொத்த மலைப் பகுதியும் நீல நிறத்தில் தெரிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் தகவலை அறிந்த சுற்றுலா பயணிகள் தற்போது ஓவேலி வனப் பகுதியில் குவியத் தொடங்கியிருக்கிறார்கள்.
நீலக்குறிஞ்சி மலர்களைப் பார்த்து பரவசமடைந்த சுற்றுலா பயணிகள், செஃல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கடந்த ஆண்டு ஊட்டி அருகேயுள்ள கவரட்டி மலைச் சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT