Published : 10 Sep 2025 06:40 PM
Last Updated : 10 Sep 2025 06:40 PM
முதுமலை: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் (55) என்ற வளர்ப்பு யானை உயிரிழந்தது, பாகன்கள் மற்றும் வனத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானை முகாம் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத் துறையினர் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன், ஒரு உதவியாளர் என யானையை பராமரித்து வருகின்றனர். வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் சிறு சிறு பணிகள் செய்வதோடு, தங்களுக்கு தேவையான பசுந்தீவனத்தை வனப் பகுதியில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.
இந்த முகாமில் மூத்த உறுப்பினராக இருப்பது சந்தோஷ் என்ற 55 வயது யானை. 5 வயதில் முதுமலை வனப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு, அப்போதிலிருந்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சுந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை சந்தோஷ் கொண்டாடியது. அப்போது, யானை சந்தோஷுக்கு ராகி மற்றும் கொள்ளு கலந்து தயாரிக்கப்பட்ட ஒரு கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், உடல் நலம் குன்றிய நிலையில், இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது. நீண்ட தந்தங்களுடன் கம்பீரமாகவும், முகாமின் அடையாளமாகவும் இருந்த சந்தோஷ் வளர்ப்பு யானையின் மறைவு பாகன்கள் மற்றும் வனத் துறையிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெப்பக்காடு வனச்சரகர் மேகலா கூறும்போது, ‘முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் யானைக்கு நேற்று, உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (செப்.10) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
வன பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலர், முதுமலை புலிகள் காப்பகம் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் வந்துள்ளது’ என்றார். முதற்கட்டமாக வயது மூப்பு காரணமாக யானை உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT