Published : 06 Sep 2025 02:08 PM
Last Updated : 06 Sep 2025 02:08 PM
கூடலூர்: பிப்ரவரி மாதம் காலாவதியான பாரம்பரிய ஈட்டி மரங்களை பாதுகாக்க, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன. தனியார் நிலத்திலிருந்தாலும் இந்த மரங்களை வெட்டத் தடைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி மரங்கள் அதிகம் உள்ள கூடலூர் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல அத்துமீறல்கள் நடப்பதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கூறும் போது, “பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருக்கும் விலை உயர்ந்த 18 ஈட்டி மரங்களைப் பட்டுப் போகச் செய்து, வெட்டும் முயற்சியாகக் கிளைகளை அகற்றி பட்டைகளை உரித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு மேற் கொண்ட வனத்துறையினர், சட்டவிரோதமாக ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இது தொடர்பாக 10 பேர் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.
பாரம்பரிய ஈட்டி மரங்களை பாதுகாக்க, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறும் போது, “மாநிலத்தின் அழிந்துவரும் பாரம்பரிய ஈட்டி மரங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டத்தை புதுப்பிக்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈட்டி மரத்தைப் பாதுகாக்க நாட்டிலேயே முதல் முறையாக 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் இயற்றினார்.
மாநிலத்தில் அழிந்துவரும் பூர்வீக இனங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதைத் தடுக்க ‘சேவ் நீலகிரிஸ்’ பிரச்சாரத்தின் பேரில் இது இயற்றப்பட்டது. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் கீழ் வரும் பிற மாநிலங்களில் இதுபோன்ற மரங்களைப் பாதுகாப்பதற்கான முன்னோடியாக முதலமைச்சரின் உடனடி நடவடிக்கை பாராட்டப்பட்டது.
டால்பெர்ஜியா லாடிஃபோலியா எனப்படும் ஈட்டி மரங்கள் தமிழ்நாட்டின் ஆனைமலைகள், நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த மரங்கள் அவற்றின் உயர் தரத்துக்கு பெயர் பெற்றவை. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான ஈட்டி மரம், 2017-ம் ஆண்டு மாநில பல்லுயிர் வாரியத்தால் தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமாக அறிவிக்கப்பட்டது.
நீலகிரியின் பழங்குடி மக்களுக்கு இந்த மரம் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. கள்ளி மோரா அல்லது காலே மோரா என்று அழைத்படுகர்கள் இதை புனிதமானதாக கருதினர். முதலில் 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட சட்டம் 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மேலும் 15 ஆண்டுகளுக்கு முறையாக நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட சட்டம் பிப்ரவரி 2025 முதல் காலாவதியானது. வனத்துறை ஏன் அமைதியாக இருந்தது என்பது சந்தேகத்திற்குரியது.
பூர்வீக மரங்களைப் பாதுகாக்க அரசுகளும், நீதிமன்றங்களும் அதிக முன்னுரிமை அளிக்கும் நேரத்தில், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வனத்துறை அளித்த காரணங்கள் அதிகாரிகளின் உணர்வின்மை உணர்வைக் காட்டுகின்றன. ஈட்டி போன்ற பூர்வீக மரங்களை எங்கும் அவ்வளவு எளிதாக வளர்க்க முடியாது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறுவது, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்பு புத்தகத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பழங்கால மரங்களில் கடைசியாக உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவதற்கான வழி வகுக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT