Published : 03 Sep 2025 12:59 AM
Last Updated : 03 Sep 2025 12:59 AM
சென்னை: பெங்களூரு மாநகராட்சி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து நுரையுடன், விஷத்தன்மையுடைய ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுவதாக செய்திகள் வெளியானது.
இந்த விவகாரத்தை பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கர்நாடக தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 4 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். மீதமுள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் வரும் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த தீர்ப்பாயம், தென்பெண்ணை ஆற்றில் விஷத்தன்மையுள்ள கழிவு நீர் திறந்து விடப்படுவதைத் தடுக்க எடுக்க உள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ.14-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT