Last Updated : 02 Sep, 2025 01:29 PM

1  

Published : 02 Sep 2025 01:29 PM
Last Updated : 02 Sep 2025 01:29 PM

ஓசூர் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரையாமல் குப்பை மேடான அவலம்!

ரசாயன மூலப்பொருட்களால் தயார் செய்யப்பட்டு ஓசூர் சந்திராம்பிகை ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்ட சிலைகள் நீரில் கரையாமல் குப்பை மேடாக மாறியுள்ளது.

ஓசூர்: நாடு முழுவதும் ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் பல்வேறு விதிமுறை வழிகாட்டுதலை வழங்கியுள்ளன.

குறிப்பாக நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணாலும், ரசாயன கலவையில்லாத வண்ணப் பூச்சுடன் சிலைகள் தயாரிக்க வேண்டும். மேலும், சிலைகளை விசர்ஜனம் செய்ய குறிப்பிட்ட நீர்நிலைகள் ஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இந்நிலையில், ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்து பிரமாண்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து, பிரமாண்ட அரங்குகள் அமைத்து சதுர்த்தியை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், சிலைகள் தயாரிப்பில் அரசின் வழிகாட்டுதல் கடைப்பிடிக்காத நிலையில் ரசாயன கலவை சிலைகள் அதிக அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் ஓசூர் ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

களிமண்ணால் தயார் செய்யப்பட்ட சிலைகள் நீரில் கரைந்தன. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையான மூலப்பொருட்களில் தயார் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் கரையாமல் நீர்நிலைகளில் தேங்கி குப்பை மேடாக மாறியுள்ளன.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் பெரும்பகுதி நீர்நிலைகளிலேயே கரைக்கப்படுகின்றன. நீர்நிலைகள், அதில் வாழும் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணாலும், இயற்கை வண்ணங்களாலும் சிலைகள் தயாரிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அதிக அளவில் குறைந்த விலைக்கு கிடைக்கும் ரசாயனக் கலவையால் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட பல சிலைகள் ரசாயனக் கலவை என்பதால், ஏரிகளில் கரையாமல் அப்படியே தேங்கி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு செய்வதில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதால், ஆண்டுக்கு ஆண்டு ரசாயன சிலை தயாரிப்பு மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தும், கண்காணிப்பு இல்லாததால், ஈர்ப்பாகவும், பிரமாண்டமாக உள்ள ரசாயன சிலைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

சிலை தயாரிப்பில் அரசின் வழிகாட்டுதல் கடைப்பிடிக்கப்படுவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தால் மட்டுமே இதுபோன்ற கொண்டாட்டங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீர்நிலைகளில் கரைப்பது ஏன்? - இந்து அமைப்பினர் சிலர் கூறியதாவது: ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து நீர்நிலைகள் நிரம்பும். இந்த நீர் சுத்தமாக வேண்டும். நீர்வாழ் உயிரினங்கள் தூய்மை அடைய வேண்டும் என்பதற்காகவும், ஆவணி மாதம் மஞ்சள், குங்குமம் வைத்து பூசிக்கப்பட்ட களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பதால், கிருமி நாசினியான மஞ்சள் நீரில் கரைவதால் நீர் சுத்தமாகும்.

மேலும், ஆறுகளில் நீர்பெருக்கால் மண் அரிப்பு ஏற்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க களிமண்ணால் செய்த சிலைகள் 3 நாட்கள் பூசித்து நன்கு காய்ந்த பின்னர் நீரில் கரைப்பதால், நீரின் அடியில் களிமண் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் பெருகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x