Published : 30 Aug 2025 05:54 AM
Last Updated : 30 Aug 2025 05:54 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் மழைநீரால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தி 4.77 மில்லியன் கனலிட்டர் மழைநீரை தேக்கக்கூடிய வகையில் 27,647 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய குளங்கள் இங்கே உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கான சக்தி கொண்ட பெரிய குளங்கள் தோண்டப் பட்டு, 49,772 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. 8.66 மில்லியன் கன லிட்டர் மழைநீரை தேக்கி வைப்பதற்கான குளங்கள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் தென்சென்னை குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் 3,081 கி.மீ. தூரத்துக்கான மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து சென்னையில் கடந்த காலங்களில் எங்கேயெல்லாம் மழைநீர் தேக்கம் இருந்ததோ, அந்த பகுதிகளில் முற்றிலுமாக மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4.5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,000 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னமும் 600 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் கால்வாய்களைக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்த பணிகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முடிக்கப்படும். 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தால் கூட அதைத் தாங்கும் வகையில் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்த கேள்விக்கு, “முதல்வர் நலமுடன் இருக்கிறார். காலையில் கூட நடைப்பயிற்சி மேற்கொண்டார். முதல்வரின் வெளிநாடு பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை” என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT