Published : 10 Aug 2025 01:18 PM
Last Updated : 10 Aug 2025 01:18 PM

அழகிய ஆபத்து: நீலகிரியில் அந்நிய மரமான ‘சீகை’யை அகற்ற வலியுறுத்தல்

படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்

அந்நிய மரமான சீகை பூத்துக் குலுங்குவதால், நீலகிரி மாவட்டமே மஞ்சள் மயமாகியுள்ளது. காண்பதற்கு அழகாக இருந்தாலும், ‘சீகை’ மரம் அழகிய ஆபத்து எனவும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள், அந்நிய மரங்களின் ஆக்கிரமிப்பு சிக்கியுள்ளன. இவற்றில் முக்கியமான ஆக்கிரமிப்பாளனாக சீகை மரங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா நாட்டை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், 1840-ம் ஆண்டு முதல் நீலகிரியில் நடவு செய்யப்பட்டன. இவை, இயற்கை சமநிலையை பாதித்ததால் 1988-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வனக் கொள்கையில் நீலகிரி சோலைகள் மற்றும் புல்வெளிகளைப் பாதுகாக்க கற்பூரம் மற்றும் சீகை மரங்களை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர்.

சீகை மரங்களை தொடர்ந்து மூன்றாண்டுகள் அப்புறப்படுத்தினால் மட்டுமே நிரந்தரமாக அழிக்க முடியும். ஐந்தாண்டு திட்டமாக (பசுமை யாக்கல் திட்டம்) கடந்த 2013-14-ம் ஆண்டில் இருந்து அந்நிய தாவரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கற்பூரம், சீகை மரங்கள் உள்ளன. இவற்றை அகற்றும் திட்டத்தின் கீழ், முக்கூர்த்தி தேசிய பூங்கா, நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அப்பர்பவானி, வடக்கு வனச்சரகங்களில் சுமார் 300 ஹெக்டேர் பரப்பிலான கற்பூரம் மற்றும் சீகை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இது மொத்த பரப்பில் ஒரு சதவீதம் மட்டும்தான். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசியப் பூங்கா 78.46 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 40 சதவீத பரப்பில் உள்ள சீகை மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, என்றனர்.

மஞ்சள் ஆபத்து - நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் முழுவதும் சீகை மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், அப்பகுதிகள் முழுவதுமே மஞ்சள் நிற பூக்களால் நிறைந்துள்ளன. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், நீலகிரி மாவட்டத்தின் சூழலுக்கு இவை பெரும் கேடு விளைவிக்கும்.

இந்த பூக்களில் இருந்து விதைகள் காற்றில் பரவுதால், இந்த மரத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது என்பது வனத்துறையினருக்கு பெரும் சவால்தான். சீகை மரத்தில் மலர்கள் பூக்கும் காலத்தில், மகரந்தம் காற்றில் பரவி மக்களுக்கு ஆஸ்துமா மற்றும் சரும நோய்களை ஏற்படுத்தும். இயற்கைக்கு ஆபத்தாக உள்ள சீகை மரத்தை முழுமையாக அகற்ற வேண்டும், என்றார்.

சீகை வெட்டி கடத்தல்: இந்த மரங்களின் பூக்கள் மருத்துவ குணம் கொண்டுள்ளதாக கூறி, சிலர் வெட்டி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தாவரவியல் வல்லுநர்கள் கூறும்போது, ‘‘நீலகிரியில் அகேசியா டெகரன்ஸ், அகேசியா மான்கிம் ஆகிய இரு வகை சீகை மர இனங்கள் உள்ளன. இந்த மரங்களில் பல்லாயிரக்கணக்கான பூக்கள் பூக்கும். ஒரு கொத்து பூவில் சுமார் ஆயிரம் விதைகள் இருக்கும். இந்த மரங்களின் பூக்களில் மருத்துவ குணம் இல்லை. வாசனை திரவியங்கள் தயாரிக்க பூக்கள் பயன்படுகின்றன’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x