Published : 28 Jul 2025 02:18 PM
Last Updated : 28 Jul 2025 02:18 PM
கெலமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பாதுகாப்பற்ற குட்டை நீரை மலைக் கிராம மக்கள் பருகி வருகின்றனர். மேலும், சரிவு நிலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி தண்ணீர் எடுக்கும்போது, முதியவர்கள், குழந்தைகள் தவறி குட்டையில் விழும் அவலமும் நீடிப்பதாக அக்கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளில் மொத்தம் 283 கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கிராமங்கள் மலைகள் மற்றும் வனத்தையொட்டியுள்ளது. இக்கிராம மக்களுக்குக் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை பூர்த்தியாகாத நிலையுள்ளது. இக்கிராமங்களுக்குச் சாலை வசதியில்லாததால் அதிகாரிகளின் கவனத்தில் வராமல், அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சலுகைகள் கிடைக்காத நிலையால், இப்பகுதி மக்கள் ஆதிவாசிகள் போல வாழும் நிலையுள்ளது.
இந்நிலையில், கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட தொழுவபெட்ட மலைக் கிராமத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் கல்பண்டகொல்லை மலைக் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டை நீரைப் பருகி வருகின்றனர். இதனால், கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் உள்ளிட்ட சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, மின் வசதி இருந்தாலும், குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக வீடுகளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தைப் போல மின் விளக்குகள் ஒளிரும். குறைந்தழுத்தம் காரணமாக, மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மின் தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ சீர் செய்ய பல நாட்களாகும். பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாததால், கிராமத்தையொட்டி உள்ள குட்டையில் தேங்கி இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறோம். கோடைக் காலங்களில் குட்டை நீரும் எங்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்படும்.
குட்டை சரிவான பள்ளத்தில் இருப்பதால், வயதான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒழுங்கற்ற இப்பள்ளத்தில் இறங்கி தண்ணீர் எடுக்கும்போது, அடிக்கடி தவறி விழும் நிலை உள்ளது. எனவே, எங்கள் கிராமத்தில் ஆட்சியர் ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் அல்லது தொழுபெட்டா கிராமத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீரை காய்ச்சி, வடிகட்டி பருக அறிவுரை: கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஸ் கூறியதாவது: குட்டை நீரைப் பருகும் போது சுகாதாரக் கேடு, நோய்கள் பரவ வழிவகுக்கும். தேங்கிய நீரில் பாக்டீரியா, வைரஸ் புழுக்கள் இருக்கும். இரும்பு சத்தும் அதிகம் இருக்கும். இந்நீரைப் பருகும்போது, வயிற்றுப்போக்கு, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படும். குடிநீரை அப்படியே பருகாமல் நன்கு காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும்.
பாதுகாப்பற்ற குடிநீரை குடிப்பதால் ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைகளுக்கு மலைவாழ் மக்கள் சுய வைத்தியம் பார்ப்பதையும், அருகில் உள்ள மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். உடல் நலப் பிரச்சினை களுக்கு தங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT