Published : 20 Jul 2025 05:29 PM
Last Updated : 20 Jul 2025 05:29 PM
கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவி வரும் நிலையில், திண்டுக்கல்லில் உள்ள மரங்களில் வாழும் வவ்வால்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வவ்வால்கள் உமிழ்நீர் மற்றும் அவை சாப்பிட்ட பழங்களை உட்கொள்வதன் மூலம் ‘நிபா’ வைரஸ் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய் கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே சுகாதாரத்துறையினர் தமிழகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தல் உள்ள கிராமங்களில் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளைநிலங்களை ஒட்டியுள்ள மரங்களில் வவ்வால்கள் அதிக அளவில் குவிந்துள்ளன. ஒரே மரத்தில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வசிப்பதால், அப்பகுதி மக்கள் ‘நிபா’ வைரஸ் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. பொதுமக்கள் கைகளையும், பழங்களையும் நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். நிபா வைரஸ் தாக்கம் இருந்தால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும். சந்தேகம் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோர் மற்றும் வீடுகளில் காய்ச்சல் உள்ள நபர்கள் குறித்து கண்காணித்து வருகிறோம். வவ்வால்களை கண்டு பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். நோய் பாதித்த நபருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை களை அளிக்க மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT