Published : 17 Jul 2025 02:36 PM
Last Updated : 17 Jul 2025 02:36 PM

தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க மேல் மண்ணை இழக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தவறான விவசாய முறைகளால் மதிப்புமிக்க பல டன் மேல் மண் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மண்ணுக்கான முக்கியதுவம் புறந்தள்ளப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தவறான விவசாய முறைகளால் அதீத மழை, காற்று, பருவ மழை காலங்களில் மதிப்புமிக்க மேல் மண்ணை இழந்து கொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டம். இந்த மண் நீர்நிலைகளில் படிந்து அவற்றின் கொள்ளளவை குறைத்து விடுவதுடன், மண் மதிப்பற்றதாகி விடுகிறது.

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் கூறும் போது, ‘நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தான் கருமண், பழுப்பு மண், மஞ்சள் மண், செம்மண் என பல்வேறு வகையாக மண் காணப்படுகிறது. காட்டேரி, குன்னூர், கொலகொம்பை, குந்தா, பைக்காரா, கல்லாறு, காலியாறு, ககடா, கரல்யாறு, பில்லிதாடா போன்ற ஆறுகளும், பாண்டியாறு, புன்னம்புழா ஆறும் மேற்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் பாய்ந்து கேரளாவில் கலக்கின்றன. இந்த நீரோடைகளில் மழை காலங்களில் மண் கலந்து செந்நிறமாக காணப்படும். மண் அடித்துச் செல்லப்பட்டு அனைத்து நீர்த் தேக்கங்களிலும் தேங்கி அவற்றின் கொள்ளளவு குறைந்து விடுகிறது.

ஊட்டியில் 200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஏரியின் பெரும்பாலான பகுதி மேல் மண்ணால் மூடப்பட்டு, தற்போது தூர் வாரப்பட்டு வருகிறது. ராணுவ நிறுவனங்களின் தேவைக்காக கட்டப்பட்ட காட்டேரி அணை முற்றிலும் மண்ணால் மூடப்பட்டு விட்டது. ஆனால், முக்கூர்த்தி நீர்ப்பிடிப்பு பகுதியில் காடுகள், புல்வெளிகள் இருப்பதால் அவை மட்டும் இன்றும் உயிரோடு உள்ளன.

மண் அரிப்புக்கு முக்கிய காரணம் புல்வெளிகள் அழிப்பு, முறையற்ற விவசாய முறைகள் ஆகியவைதான். சூழலை மதிக்காமல் அதிகரித்து வரும் கட்டிடங்கள், கற்பூர, பைன் காடுகள் மண்ணை வளமிழக்கச் செய்துள்ளன. நீரோடைகளின் 50 மீட்டர் வரை இயற்கை தாவரம் இருக்க வேண்டும் என்ற விதி இன்று மீறப்பட்டுள்ளது.

புறம்போக்கு நிலம், அரசு நிலங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் எதிர்கால நன்மை கருதி மண் வளம் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற விழிப்புணர்வு பிரச்சாரமும், திட்டமிட்ட செயல் வடிவமும் அவசர தேவையாக உள்ளது. அழிக்கப்பட்ட மேல் மண் இனி உருவாக பல நூறு ஆண்டுகள் ஆகும். இனி இருக்கும் இயற்கை வளத்தையாவது பாதுகாத்தால் மட்டுமே தாவர வளர்ச்சியும், பல்லுயிர் பெருக்கத்தின் எதிர்காலமும் சமநிலையில் இருக்கும்,’ என்றார்.

ஊட்டி மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானிகள் கூறியதாவது: 1978-79-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் பல்லாயிரம் டன் மேல் மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 1993-ம் ஆண்டு 350-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளை நீலகிரி மாவட்டம் எதிர்கொண்டது. நவம்பர் 12-ல் குன்னூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் குன்னூர் - மேட்டுபாளையம் சாலையில் அமைந்திருந்த தர்கா உட்பட 25 வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன.

நிலச்சரிவுக்கு முக்கிய காரணம் நீலகிரியில் 30 டிகிரி சரிவில் விவசாயம் மேற்கொள்ள கூடாது, கட்டிடங்கள் கட்டக் கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டதே. சோலை வனங்கள் மற்றும் புல்வெளிகள் மிகுந்த பகுதியில் நிலச்சரிவு காணப்படுவதில்லை. மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கடும் சரிவான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இதன் காரணமாக மழை பெய்தால், மேல் மண் அடித்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு அடித்துச் செல்லப்படும் மண், நீரோடை மற்றும் அணைகளில் சகதியாக தங்கி அவற்றின் கொள்ளளவை குறைத்து விடுகிறது. மாவட்டத்தில் படிமன் முறையிலான விவசாயம் மேற்கொண்டால் மட்டுமே மண் அரிப்பு ஏற்படாது. இது குறித்து விவசாயிகளுக்கு எங்கள் நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x