Published : 16 Jul 2025 03:14 PM
Last Updated : 16 Jul 2025 03:14 PM
திருவண்ணாமலை மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் அமோகமாக விற்பனையால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கும் நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல் கின்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் மாநகர மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயண்படுத்துவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து அறிவிப்பு பலகை கிரிவல பாதையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த அறிவிப்பு பலகை இல்லாமல் போய்விட்டதால், கிரிவல பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள், குடிநீர் பாட்டில்கள் என மலைபோல் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் திருவண்ணாமலை மாநகரில் குவிகின்றன. தமிழ்நாட்டில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு அரசு அலுவலகங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சில சுற்றுலா தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மிக சுற்றுலா தலாமான திருவண்ணாமலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடையின்றி அமோகமான விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாநகரில் தீப திருவிழாவின் போது, மாசு கடுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிக்கும் நடவடிக்கையாக கைப் பைகளை கொண்டு வரும் பக்தர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. தீபத்திருவிழா நாட்களில் மட்டுமே இந்த துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தற்போது, திருவண்ணாமலை மாநகருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையில் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்களில் தான் உணவு பார்சல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சாப்பிடும் தட்டுகளிலும் வாழை இலை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் கவர்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த பிளாஸ்டிக் பயண்பாட்டினை தடுக்க எந்த அதிகாரிகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது இல்லை .
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவல பாதையில் எங்கு பாரத்தாலும் பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களும் மலைபோல் குவிந்து வருவது நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. இதனால் கிரிவல பாதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வாழும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை மாநகர பகுதியிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதித்து மாற்று ஏற்பாடு செய்ய உரிய நடடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் மக்களுக்கும், வன விலங்குகளுக்கம் கடும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே, ஆன்மிக சுற்றுலா தலமான திருவண்ணாமலை மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடைசெய்ய மாவட்ட நிர்வாகமும், துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களில் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT