Published : 10 Jul 2025 11:00 AM
Last Updated : 10 Jul 2025 11:00 AM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த கர்ப்பிணி யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அந்த வழியாக செல்லும் சரக்கு ரயில் 2 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த யானை, குட்டியை ஈன்றெடுத்ததையடுத்து பாதுகாப்பாக ரயில் இயக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, ஜார்க்கண்டில் உள்ள பர்கானா மற்றும் ஹசாரிபாக் ரயில் நிலையங்களுக்கு இடையிலான காட்டுப்பகுதியில் இருந்த தண்டவாளத்தில் படுத்திருந்த கர்ப்பிணி யானை திடீரென பிரசவ வலியால் அவதிப்பட்டது.
இதனைக் கண்ட வனத் துறை அதிகாரிகள் அதிகாலை 3 மணிக்கு ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். நிலக்கரியை ஏற்றிக் கொண்டு அந்த மார்கத்தில் அடிக்கடி சரக்கு ரயில்கள் செல்வது வழக்கம். இதையடுத்து, அருகில் இருந்த ரயில் நிலையத்தை தொடர்பு கொண்ட அதிகாரிகள் புறப்பட தயாரக இருந்த ரயிலை சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். கர்ப்பிணி யானை தனது குட்டியை ஈன்றெடுத்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக லோகோ பைலட்டுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்யப்பட்டது.
இதுகுறித்து ராம்கர் டிவிஷன் வன அதிகாரி நிதீஷ் குமார் கூறியதாவது: அதிகாலை நேரத்தில் கர்ப்பிணி யானை ஒன்று பிரசவ வலியில் தண்டவாளத்தில் படுத்திருப்பதாக அங்குள்ள வனக் காவலர் தகவல் தெரிவித்தார். சரக்கு ரயில் வரும்பட்சத்தில் தடம்புரண்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.
மேலும், அந்த மார்க்கத்தில் வரும் ரயில் அனைத்தையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சிறிதும் தாமதம் செய்யாமல் பர்கானாவில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அனைத்து ரயில்களையும் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டேன். இதையடுத்து அந்த கர்ப்பிணி யானை தண்டவாளத்திலேயே குட்டி ஒன்றை ஈன்றெடுத்து பாதுகாப்பாக காட்டுக்குள் சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.
ரயில்வே தண்டவாளத்தில் கர்ப்பிணி யானை குட்டியொன்றை ஈன்றெடுக்கும் வீடியோ வன காவலர் மற்றும் உள்ளூர்வாசிகளால் பதிவு செய்யப்பட்டது. இது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மனிதனுக்கும் - யானைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜார்க்கண்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை தாக்கி 474 பேர் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் ஏற்படுவதில் ஒடிசாவுக்கு அடுத்த படியாக ஜார்க்கண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று சுற்றுச் சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்திற்கான முன்னாள் மத்திய அமைச்சர் கிருதி வர்தன் சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று 2019 முதல் 2024 ஜூலை வரை மின்சாரம் தாக்கியது உட்பட பல்வேறு காரணங்களால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 யானைகள் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT