Published : 09 Jul 2025 09:34 PM
Last Updated : 09 Jul 2025 09:34 PM

விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு: பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

சென்னை: பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்.10-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், கடந்த ஆண்டு பிப்.18-ம் தேதி விபத்தில் 10 பேரும், மே 1, 3 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் தலா 3 பேரும், மே 9-ம் தேதி விபத்தில் 8 பேரும், மே 10-ம் தேதி விபத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்ய கோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் அமர்வின் உறுபபினர்கள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: எந்த ஒரு பட்டாசு ஆலையும் நைட்ரேட் கலவை உள்ளிட்ட வெடிபொருளை கையாளவும், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவும் பெட்ரோலிய வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் (PESO) உரிமம் பெற்ற பிறகே இயங்க வேண்டும். இந்த உரிமத்தை தலைமை வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரி, பட்டாசு ஆலைகளுக்கு வழங்குகிறார்.

மாசுக் கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், "பட்டாசு ஆலைகள் வெடிபொருள்களை பயன்படுத்து வதால் எங்கள் அதிகாரத்தின் கீழ் வரவில்லை" என குறிப்பிட்டுள்ளது. ஆனால் பட்டாசு ஆலைகள் ஒவ்வொன்றும் தேவையான உரிமங்களைக் கொண்டிருக்கிறதா, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதா, அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு துறையாலும் அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறதா என்பது குறித்து அறிக்கையில் தெளிவாக இல்லை.

மேலும், "பட்டாசு ஆலைகள் நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்கிறதா, அவை செய்த வெளிப்படையான விதிமீறல்கள் குறித்து தொடர்புடைய துறைகளால் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை" என்று தெரிகிறது.

துணை தலைமை கட்டுப்பாடு அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், "பட்டாசு உற்பத்தி கிடங்குகளுக்கு எந்த காரணங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டதோ, அதை மீறி வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பட்டாசுகளை காயவைக்கும் பகுதிகாலாக இருந்தன" என குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு ஆலை விதிகளை உரிமையாளர்கள் அறியாமல் இருப்பது கவலை அளிக்கிறது. பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க திறன் பெற்ற கண்காணிப்பாளர்கள் யாரும் நியமிக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பட்டாசு கையாளப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் தேவையான உரிமங்களை பெற்று இயங்குகிறதா, பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, தொடர்புடைய துறைகள் தொடர்ந்து ஆலைகளை ஆய்வு செய்கின் றனரா, இத்துறைகள் சார்பில் ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

விதிமீறல் கண்டறியப்பட்டால் தொடர்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்கவும், ஆலையை மூடவும் உத்தரவிட வேண்டும். இந்த ஆய்வுக்காக தலைமை வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கும் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய இருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படுகிறது.

இருவரும் தொடர்புடைய துறையினரை கொண்ட குழுவை அமைத்து, அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்து, விதிமீறல்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, இனி பட்டாசு ஆலை விபத்து நடக்காத வகையில் தடுக்க 10 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு, பட்டாசு தொழிற்சாலைகளை இயக்க அனுமதிப்பதற்கு முன்பாக ஊழியர்களுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x