Published : 09 Jul 2025 02:31 PM
Last Updated : 09 Jul 2025 02:31 PM

சுற்றுலா பயணிகள் வீசும் உணவுகளால் மழுங்கி போகும் விலங்குகளின் வேட்டை குணம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுவதாக சுற்றுலாப்பயணிகள் உணவு அளிப்பதால், விலங்குகளின் வேட்டை குணம் மழுங்கி வருவதுடன், அவை விபத்துகளில் சிக்கி உயிரிக்கும் அபாயம் நீடிக்கிறது.

தமிழகத்தில் 56 சதவீதம் வனப்பரப்பை கொண்டுள்ளது நீலகிரி மாவட்டம். பெரும்பாலான பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளதால், இங்கு வசிக்கும் மக்களுக்கு வன விலங்குகளுடன் பரிச்சயம் அதிகம்.நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாகவும் உள்ளதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை கண்டதும் ஆர்ப்பரிக்கின்றனர். குறிப்பாக நெடுஞ்சாலைகள், முதுமலை புலிகள் காப்பகங்களை கடந்து செல்லும் போது விலங்குகளை கண்டதும், அவற்றுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களது இரக்கம் இந்த விலங்குகளின் உணவு வேட்டை குணத்தை மழுங்கச் செய்து வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் அருகருகே உள்ளன. இந்த காப்பகங்களில் புலி, யானை, மான், காட்டெருமை, மயில் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. இந்த காப்பகங்களின் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை 67 செல்கிறது. மூன்று மாநில போக்குவரத்துக்கான முக்கிய சாலை என்பதால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் உள்ளது.

வாகன போக்குவரத்து தொடர்ந்து இருப்பதால், வன விலங்குகள் சாலையைக் கடந்து காப்பகத்தின் மறுபுறத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. சாலையை கடக்கும் போது விலங்குகள் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை இருந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு, இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வன விலங்குகள் சாலையை கடப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

உணவு அளிப்பதால் விபரீதம்: இந்நிலையில், தற்போது வனத்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதால், அவற்றுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. உணவை உட்கொள்ள விலங்குகள் சாலையோரங்களுக்கு வருவதால் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விலங்குகள் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து சாலையோரங்களில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சாலையில் வானரங்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். இவற்றை காணும் சுற்றுலாப் பயணிகள் அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, குன்னூர் - பர்லியாறு சாலையில் இரு பக்கமும் உள்ள வனப்பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உணவு பொருட்களை அங்கு அமர்ந்து உண்கின்றனர். பின்பு, உணவு கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் இப்பகுதியிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். கழிவுகளை குரங்குகள் உண்பதால், பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களிலிருந்து உணவை தூக்கி ஏறிவதால் அவற்றை உண்ண சாலைக்கு வரும் விலங்குகள் எதிரே வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், குன்னூர்-பர்லியாறு, கூடலூர்-கக்கநல்லா, ஊட்டி - கூடலூர் சாலைகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இது குறித்து அந்த சாலையில் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். இந்நிலையில், வாகனங்களில் அடிப்பட்டு பல குரங்குகளின் ஊனமாகியுள்ளன. இவை இந்த மலைப் பாதையில் வலம் வருவது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைக்கிறது.

வனங்களின் அருகேயுள்ள குடியிருப்புகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இவற்றை பிடிக்கும் வனத்துறையினர் வனங்களில் விடுவிக்கின்றனர். இருப்பினும் குரங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் ஆத்திரமடையும் சிலர் குரங்குகளை தாக்க முற்படுகின்றனர். இதன் காரணமாகவும் குரங்குகள் ஊனமாகின்றன. குடியிருப்புகளில் பிடிக்கப்படும் குரங்குகள் வனத்தில் விடப்பட்டாலும், மீண்டும் அவை குடியிருப்புகளை தேடி வருகின்றன.

நெஸ்ட் அமைப்பின் அறங்காவலர் சிவதாஸ் கூறும் போது, ‘நீலகிரி-கர்நாடகா தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரங்களில் உள்ள வனப்பகுதிகளை ஓட்டி, நாள்தோறும் பல நூறு குரங்குகள், வாகனங்களில் இருந்து வீசும் உணவுக்காக காத்திருந்து, வாகனங்களை நோக்கி ஓடும் போது, அடிபட்டு கை, கால்களை இழந்து வருவது தொடர்கதையாகிறது. சுற்றுலாவின் போது, ‘போட்டோ’ எடுப்பதற்காக, ‘சிப்ஸ்’ உட்பட பிற உணவுகளை பயணிகள் வீசுகின்றனர்.

இவற்றில் விலங்குகளுக்கு பிடித்தமான உப்பு உள்ளதால், அதை உண்ண விலங்குகள் சாலைக்கே வந்து விடுகின்றன. குரங்குகள் உண்டு வந்த நிலையில், தற்போது மான், மயில் போன்ற விலங்குகள் பயணிகள் வீசும் உணவுக்காக காத்திருக்கும் அவல நிலையைக் காண முடிகிறது. சுற்றுலாப் பயணிகள் விலங்குகளுக்கு உணவளிப்பதால், அவற்றின் இரை தேடும் குணம் மறைந்து வருகிறது. உணவுக்காக காத்திருக்கும் விலங்குகள், வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்தும், எச்சரிக்கையை மீறி சுற்றுலாப் பயணிகள் செயல்படுகின்றனர் என வனத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

வனத்துறையினர் கூறும் போது, வனத்தை ஒட்டிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தவோ, விலங்குகளுக்கு உணவளிக்கவோ கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உணவளிக்கும் நபர்களை கண்டறிந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிறது. சிலர் வனத்துறையினர் இல்லாத பகுதிகளில் விலங்குகளுக்கு உணவு அளிக்கின்றனர்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x