Last Updated : 03 Jul, 2025 01:07 PM

 

Published : 03 Jul 2025 01:07 PM
Last Updated : 03 Jul 2025 01:07 PM

ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை - வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!

கோப்புப் படம்

கர்நாடக மாநில வனத்துறையினர் ரப்பர் புல்லட்டை பயன்படுத்தி யானைகளை விரட்டுவதால், வலசை வந்த யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபரில் கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயம் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வரும். இவை ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்கம், சானமாவு, செட்டிபள்ளி மற்றும் மகாராஜாகடை வழியாக ஆந்திர மாநிலம் கவுண்டனியா சரணாலயம் மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா சரணாலயம் வரை வலசை செல்லும். பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடக மாநிலத்துக்கு திரும்பும்.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் வலசை வந்த 200 யானைகள் ஆந்திர வனப்பகுதிக்குச் செல்லாமல் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து தேன்கனிக்கோட்டை, ஓசூர். ஜவளகிரி ஆகிய பகுதிகளில் சுற்றின. இவற்றில் 100 யானைகளை ஒன்றிணைத்து வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்தனர். மீதமுள்ள 100 யானைகளை விரட்டியும் அவை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் தமிழக வன எல்லை கிராமங்களில் சுற்றி வருவதோடு, விளை நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தி வருவது தொடர்கிறது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “ஓசூர் வனக்கோட்டத்தில் நிரந்தரமாக 20-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவற்றால் எங்களுக்குப் பாதிப்பும் இல்லை. வலசை வரும் யானைகளால் தான் அதிக அளவில் பயிர்கள் சேதமாகின்றன. இதைத் தவிர்க்க வலசை காலங்களில் பயிர் சாகுபடியைத் தவிர்த்து வருகிறோம். ஆனால், இந்தாண்டு வலசை வந்த யானைகள் ஏப்ரலில் கர்நாடக மாநிலத்துக்குச் செல்லாமல் இங்கே சுற்றுவதால், வேளாண் பணி பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: வலசை வரும் யானைகள் விளை நிலங்களுக்குள் செல்வதைத் தடுக்க வனப்பகுதிகளில் புல் மற்றும் மூங்கில் அதிக அளவில் வளர்த்துள்ளோம். வன எல்லையில் கம்பிவடம் அமைத்துள்ளோம். கர்நாடகா வனப்பகுதி ரயில் பாதையை யொட்டி உயரமான தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால், யானைகளால் அதைக் கடந்து செல்ல முடியாமல், தமிழக வனப்பகுதிக்குள் சுற்றி வருகின்றன.

மேலும், அம்மாநில வனத்துறையினர் ரப்பர் புல்லட் மூலம் யானைகளைச் சுட்டு விரட்டுவதால், அவை அடிப்பட்டு தமிழக வனப் பகுதிக்குத் திரும்பி, இங்கு நிரந்தரமாகத் தங்கியுள்ளன. விளைநிலங்களில் யானைகள் செல்வதைத் தடுக்க தேனீ வளர்க்கும் திட்டம் இங்கு கைகொடுக்க வில்லை. எனவே, தோட்டக்கலைத் துறை மற்றும் வனத்துறையில் விவசாயிகள் ஆலோசனை பெற்றுப் பயிர் சாகுபடி செய்ய அறிவுறுத்தி யுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: இனப்பெருக்கத்துக்காகவும், உணவுக்காகவும் குடகுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து இரு குழுக்களாக ஆண்டுதோறும் நவம்பரில் வலசை வரும் யானைகள் ஓசூர் வனக்கோட்டம் வழியாக ஆந்திர மாநிலம் கவுண்டினியா வனவிலங்கு சரணாலயம், திருப்பதி வழியாக அசாம் மாநில வனப்பகுதி வரை செல்ல நெடுந்தூர வலசை பாதை இருந்தது. தற்போது, கவுண்டினியா அருகே வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், வலசை யானைகள் தமிழக வனப்பகுதியில் சுற்றி வருவதோடு, இங்குள்ள விளை நிலங்களை வாழ்விடமாக மாற்றி வருகின்றன. கர்நாடகா வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால், யானைகள் அச்சப்பட்டு கர்நாடக வனப் பகுதிக்கு செல்வதில்லை. குறிப்பாக, கர்நாடகா வனத்துறையினர் ரப்பர் புல்லட் பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x