Last Updated : 24 Jun, 2025 02:17 PM

 

Published : 24 Jun 2025 02:17 PM
Last Updated : 24 Jun 2025 02:17 PM

பள்ளிப்பட்டு  விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாச குரங்குகளும், அவதிப்படும் மக்களும்!

பள்ளிப்பட்டு குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள குரங்குகள்..

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு வட்டப் பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்று, பள்ளிப்பட்டு வட்டம். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த வட்டத்தில், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகள் மற்றும் 33 ஊராட்சிகள் உள்ளன. இந்த வட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

மலையும் மலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், பள்ளிப்பட்டு வட்டப் பகுதிகளை ஒட்டியுள்ள ஆந்திர வனப்பகுதிகளில் இருந்து இரை தேடி வரும் குரங்குகள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்துவருவதால் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்ததாவது: பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள நெடியம், பண்டரவேடு, புண்ணியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் ஆந்திர வனப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குரங்குகள் இரை தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.

அவ்வாறு வரும் குரங்குகளின் அட்டகாசத்தால் பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகள் மற்றும் நெடியம், கொளத்தூர், கர்லம்பாக்கம், குமாரராஜுபேட்டை, பண்டரவேடு, புண்ணியம், வடகுப்பம், சூரராஜூப்பட்டடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கு நாள்தோறும் வனப்பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் வருகின்றன.

அவ்வாறு வரும் குரங்குகள், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில், தென்னந்தோப்புகளில் தென்னை மரங்களில் ஏறி, இளநீர், தேங்காய்களை பறித்து வீணாக்குகின்றன. கரும்பு தோட்டங்களை நாசமாக்குகின்றன. மாந்தோப்புகளில் புகுந்து மாங்காய் மற்றும் மாம்பழங்களை கடித்து வீணாக்குகின்றன. அதேபோல், காய்கறி தோட்டங்களிலும் நுழையும் குரங்குகள் காய்கறி பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த குரங்குகள், குடியிருப்பு பகுதிகளில், வீடுகளில் உள்ள உணவு பொருட்களை அபகரித்து உண்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்களை நாசம் செய்கின்றன. சாலைகளில் சுற்றித் திரியும் இந்த குரங்குகளால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். நெடியம் பகுதியில் மலையில் அமைந்துள்ள செங்கல்வராய சுவாமி கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் குரங்குகளின் அட்டகாசத்தால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்படி பல ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வரும் குரங்குகள் குறித்து, வனத்துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் பலனில்லை.

ஆகவே, இனியாவது பள்ளிப்பட்டு வட்டப் பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x