Published : 22 Jun 2025 05:08 PM
Last Updated : 22 Jun 2025 05:08 PM
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், கடந்த 2017-ம் ஆண்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் ரூ.1,056 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. பல்வேறு நிர்வாக மற்றும் நிதி காரணங்களால் இந்த திட்ட நிதி ரூ.612 கோடியாக குறைக்கப்பட்டது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 82 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இதுவரை 59 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 23 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகரப்பகுதியில் வனத்துறையையொட்டி சுதேசி மில் வனப்பகுதியில் ரூ.5.75 கோடி செலவில் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இப்பணிகள் தொடங்கின. இதில் ரூ.3.75 கோடி செலவில் நடைபாதையும், ரூ. 2 கோடி செலவில் வனத்துறை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தை சீரமைத்து சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் 32 அறைகள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சுதேசி மில் வளாகத்தில் மரங்கள் சூழ்ந்துள்ள சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 1.3 கி.மீ தூரத்துக்கு கூழாங்கற்கள் கொண்டு அக்குபஞ்சர் நடைபாதை, 1.7 கி.மீ தூரத்துக்கு சிறிய கருங்கற்கள் கொண்ட நடைபாதை என மொத்தமாக 3 கி.மீ தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டப்பணிகள் 75 சதவீத நிறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட பணிகள் எஞ்சியுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பணிகள் முடிவடையவில்லை. சில நாட்கள் காலநீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும்.
இப்பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா துறையிடம் இதை ஒப்படைத்து விடுவோம். இங்கு கட்டண அடிப்படையில் நடை பயிற்சியை மேற்கொள்ளலா ம். அத்துடன் வனத்துறையில் இருந்த கட்டிடத்தை சீரமைத்து 32 அறைகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி இந்த வனப் பகுதியை ரசிக்க முடியும். இது புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT