Published : 22 Jun 2025 01:24 PM
Last Updated : 22 Jun 2025 01:24 PM
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா - மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மோனிகாதேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த மகள் ரோஷினி குமாரி(4) உடனிருந்தார். மோனிகாகுமாரி தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி குடிநீர் குழாய் அருகே இருந்தார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி மோனிகாதேவி ஓடி வந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியின் கழுத்தில் கடித்து இழுத்து செல்வதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை தேடினர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், போலீஸார் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சிறுமி அணிந்திருந்த ஆடை ரத்தக் கறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. இரவு 9 மணி வரை தேடியும் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும் நேற்று காலை தேடுதல் பணி தொடங்கியது. தேடுதல் பணியில் பைரவா, வீரா ஆகிய இரு மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. காலை 11.30 மணியளவில் தேயிலை தோட்டத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள சோலைக்காட்டில் சிறுமியின் உடல் கிடந்தது. சிறுமியின் பாதி உடலில் தலை மற்றும் ஒரு வலது கால் மட்டுமே இருந்தது. மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக் காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தவும், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணி புரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் மகள் அப்சரா (6) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். கடந்த 9 மாதங்களில் இரு சிறுமிகளை சிறுத்தை தாக்கி கொன்றது தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT