Published : 14 Jun 2025 04:06 PM
Last Updated : 14 Jun 2025 04:06 PM
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், பேரூராட்சி பகுதியில் 16 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரி மற்றும் குளங்களில் கலக்கும் சூழல் இருந்து வருகிறது.
அதனால், நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கழிவுநீர் கசடு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஸ்வச் பாரத் மிஷன்-2 திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பேரூராட்சியின் 18 வது வார்டு வடக்குப்பட்டு பகுதியில் அமைந்துள்ள 11.2 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தின் ஒருபகுதியில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், வழக்கமாக கழிவுநீர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படும் நிலையில், இங்கு முதன்முறையாக அன்றாட பணிகளின்போது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளது. இதனால், பேரூராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகளான ஏரி, குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நீர் நிலைகள் தூய்மையடை வதோடு அதனருகே உள்ள விவசாயிகள் பாசனத்துக்கு தூய்மையான நீரை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் கூறியதாவது: ஸ்வச் பாரத் மிஷன்-2 திட்டத்தில் திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், வீடுகளில் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு கழிவுநீராக வெளியேறி நீர் நிலைகளில் கலக்கும் கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு பம்பிங் செய்து சுத்திகரிக்கப்பட உள்ளது.
அதற்காக, சதுரங்கப்பட்டினம் செல்லும் சாலையோரம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே என மொத்தம் 4 இடங்களில் பம்பிங் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதனால், பேரூராட்சி பகுதியில் உள்ள 2 ஏரிகள், 4 குளங்களில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் அப்பகுதியில் சுமார் 1 ஏக்கர்பரப்பளவில் நெல் பயிரிடவும் திட்டமிட்டுள்ளோம்.
இதேபோல், அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு தேங்கியுள்ளன. இவற்றை, பயோ மைனிங் மூலம் தூய்மை படுத்துவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, மேற்கண்ட திட்டத்தில் ரூ.84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT