Last Updated : 12 Jun, 2025 08:31 PM

 

Published : 12 Jun 2025 08:31 PM
Last Updated : 12 Jun 2025 08:31 PM

பாலாற்றை மீட்பது குறித்த ஆய்வறிக்கை உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்படும்: முன்னாள் நீதிபதி சத்யநாராயணா தகவல்

ராணிப்பேட்டையில் சுற்றுச்சூழல் மதிப்பீடு, சூழல் தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு குழுவினர் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

ராணிப்பேட்டை: “மாசடைந்த பாலாற்றை மீட்பது குறித்தும், தேங்கி கிடக்கும் குரோமிய கழிவுகளை அகற்றுவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,” என சுற்றுச்சூழல் மதிப்பீடு, சூழல் இழப்பீடு, சூழல் தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு குழுத் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான சத்யநாராயணா கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் கலக்கப்படும் தோல் கழிவுநீர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கலக்கப்படும் கழிவுநீரால் பாலாறு மாசடைந்து காணப்படுகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். மாசடைந்த பாலாற்றை ஆய்வு செய்து பாலாற்றை மீட்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாசடைந்த பாலாற்றை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சத்யநாராயணா தலைமையில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் மாநில சுற்றுச்சூழல், நீர்வளத்துறை மற்றும் மனுதரார்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டு ‘சுற்றுச்சூழல் மதிப்பீடு, சூழல் இழப்பீடு, சூழல் தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு’ குழு அமைத்து உத்தரவிட்டது. இக்குழுவினர் பாலாற்றுப் பகுதியை நேரில் ஆய்வு செய்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, சுற்றுச்சூழல் மதிப்பீடு, சூழல் தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு’ குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 12) முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் கழிவு நீரை சுத்திகரிக்கும் ராணிடெக் சுத்திகரிப்பு நிலையம், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தேங்கி கிடக்கும் குரோமிய கழிவுகள் மற்றும் ஆற்காடு - ராணிப்பேட்டை பாலாற்று படுக்கையில் கழிவு நீர் கலக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றை இக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம், ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணா கூறியதாவது: “தோல் கழிவுகள், குரோமிய கழிவுகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு நீரால் பாலாறு மாசடைவது தெரியவந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தேக்கி வைக்கப்பட்டுள்ள குரோமிய கழிவுகளால் நிலம், நீர் மாசடைந்துள்ளது.

இதற்கு டெண்டர் விடப்பட்டும். அதை அகற்ற யாரும் முன் வராததால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம். இதையடுத்து, பாலாற்று பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். அடுத்த கட்டமாக இரண்டு வாரம் கழித்து அரசு அதிகாரிகளோடு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வை ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளோம்.

இதில், பாலாறு எதனால் மாசடைகிறது? இதன் மூலம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் இல்லாமல் பாலாற்றை மீட்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன? குரோமிய கழிவுகளை அகற்றுவதற்கான வழிகள் என்ன என்பது குறித்து பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும் குப்பைக்கழிவுகளை கையாள்வதிலும் அதனை அப்புறப்படுத்துவதிலும் பொதுமக்களுக்கும் பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் தேவை.

இதனை ஊடகங்கள் எடுத்துக்கூறி பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்,” என்று அவர் கூறினார். அப்போது, சுற்றுச்சூழல் துறை சிறப்பு செயலாளர் அனுராக், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் கண்ணன், வேலூர் மாவட்டசுற்றுச்சூழல் துறை இணை தலைமை பொறியாளர் சரவணன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x