Last Updated : 12 Jun, 2025 03:39 PM

 

Published : 12 Jun 2025 03:39 PM
Last Updated : 12 Jun 2025 03:39 PM

காட்டு பன்றிகள், மான்களால் ராமநாதபுரத்தில் 1.15 லட்சம் ஏக்கரில் விவசாயம் முற்றிலும் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள், மான்களால் 1.15 லட்சம் ஏக்கர் புன்செய் நிலங்களில் முற்றிலும் விவசாய சாகுபடி நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 3.40 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் விவசாயமும், 12 ஏக்கரில் சிறுதானியங்கள், 8 ஆயிரம் ஏக்கரில் பயறு வகைகள், 30 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், மல்லி, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் பயரிடப் படுகின்றன. இங்கு பருவ நிலைகளால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால், செய்த விவசாயத்தை மான்களும், காட்டுப்பன்றிகளும், காட்டு மாடுகளும் அழித்து நாசம் செய்கின்றன.

இதுகுறித்து காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது: பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் காட்டுப்பன்றிகள், மான்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல ஆண்டுகுளாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் 75 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களில் நெல், பருத்தி, எள், சோளம், பயறு வைகைகள் மற்றும் 40 ஆயிரம் ஏக்கரில் கடலை சாகுபடி செய்வது கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

மேலும் கோடை காலத்தில் நன்செய், புன்செய் நிலங்களில் பயிரிடக்கூடிய பருத்தி, எள், உளுந்து உள்ளிட்ட பயறு வகைள் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பருத்தி செடிகளை ஒடித்தும், காய்களை திண்றும் நாசம் செய்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதுகுளத்தூர் பகுதியில் கீழக்குளம், நல்லுக்குறிச்சி, பரமக்குடி பகுதியில் ஊரக்குடி, புதுக்குடி, வெங்காளூர், கமுதக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பருத்திச் செடிகளை காட்டுப்பன்றிகள் நாசம் செய்துள்ளதை விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டோம்.

இதேநிலை தொடர்ந்தால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவர். தற்போதே தமிழகம் உணவு தானிய உற்பத்தில் பின்தங்கியுள்ளது. காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தவும், காட்டுப்பன்றிகளை சுடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு சரியான இழப்பீடு வழங்க வேண்டும். கேரளாவில் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல உள்ளாட்சி நிர்வாகத்திடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளாட்சி நிர்வாகமே முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்கிறது.

தமிழகத்தில் இருந்து ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவும் கேரளாவில் சென்று பார்வையிட்டு வந்தது. ஆனால் அக்குழு முறையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்காமல், காட்டுப் பன்றிகளை காட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில் வந்தால் அதை பிடித்து காட்டில் விட வேண்டும் போன்ற பரிந்துரை களை வழங்கியுள்ளது. இது சாத்தியமில்லாதது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் அழிவதற்குள், விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்த மாவட்ட வன அலுவலர் ஹேமலதாவிடம் கேட்டபோது, மாவட்டத்தில் மான்கள், காட்டுப்பன்றிகள் குறித்து கேமராக்கள் அமைத்தும், ட்ரோன்கள் மூலமும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். காட்டுப்பன்றிகள் என்பதை உறுதி செய்ய 2 இடங்களில் இறந்த பன்றிகளின் மாதிரி களை எடுத்து அதை உறுதி செய்ய, சென்னையில் உள்ள விலங்கு பரிசோதனை ஆய்வு மையத்துக்கு அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவு வந்த பின்பு தான் காட்டுப்பன்றியா என்பது உறுதி செய்யப்படும். சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இதேபோன்று மாதிரி எடுத்து சோதனை செய்ததில், அவை காடுகளில் திரியும் வளர்ப்பு பன்றிகள் என முடிவு வந்துள்ளது.

காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான அரசு உத்தரவு இன்னனும் வரவில்லை. வனவிலங்குகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்திய பின்னும், ஆய்வு மூலம் காட்டுப்பன்றிதானா என்பதை உறுதி செய்த பின்பும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x