Published : 10 Jun 2025 02:41 PM
Last Updated : 10 Jun 2025 02:41 PM
புதுச்சேரி கடற்கரையில் கடலரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சின்னவீராம்பட்டினத்தில் டென்மார்க் நீலக்கொடி ஏற்பட்ட கான்கிரீட் அடித்தளம் இடிந்து விழுந்துள்ளது.
புதுவையில் ‘ராக் பீச்’ என அழைக்கப்படும் கடற்கரைச் சாலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த பகுதியாகும். இதேபோல் சுற்றுலா பயணிகளை கவர பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை என புதிய கடற்கரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற சில கடற்கரைகளில் ஒன்றாக புதுவை சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை உள்ளது.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள சின்னவீராம்பட்டினத்தில் உள்ள ஈடன் கடற்கரை, டென்மார்க்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையிடம் இருந்து (FEE) 'நீலக் கொடி' சான்றிதழைப் பெற்ற யூனியன் பிரதேச அளவில் முதல் கடற்கரையாக கடந்த 2021-ல் அறிவிக்கப்பட்டது.. இங்கு பேணப்படும் சுகாதாரம், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை ஆகியவற்றை பார்வையிட்டு, இந்த நீலக்கொடி அந்தஸ்து அப்போது வழங்கப்பட்டது.
இந்த கடற்கரையில் தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பின் காரணமாக, இந்த நீலக்கொடி ஏற்றப்பட்ட கான்கிரீட் அடித்தளம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் நீலக்கொடி அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ரமணமூர்த்தி கூறுகையில், "பருவகால மாற்றங்களால் ஈடன் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பருவகால மாற்றங்களின்போது கடல் அரிப்பை தடுப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இது குறித்து சுற்றுலா மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "ஈடன் கடற்கரையில் கடலரிப்பு குறித்து அரசு ஆய்வு நடத்தியுள்ளது. அரிப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலோர ஒழுங்கு முறை விதிகளை புரிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். கடலோர அரிப்பு ஏற்பட்டுள்ள கிராமங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT