Published : 05 Jun 2025 02:31 PM
Last Updated : 05 Jun 2025 02:31 PM
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய கடல் நீர்வளம் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சர்வதேச கடல் பாசி தின விழா நடைபெற்றது.
சர்வதேச கடல்பாசி தின விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மத்திய கடல் நீர்வளம் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வினோத் ,மத்திய உபரிநீர்ஆராய்ச்சி நிலைய அலுவலர் வீரகுருநாதன், மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேசியதாவது: சர்வதேச கடற்பாசி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், கடல்பாசி வளர்ப்பில் அதிகளவு ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக லாபம் பெறவேண்டும் என்பதே ஆகும்.
அந்த வகையில் கடல்பாசி வளர்ப்பு என்பது அவ்வப்போது காலச் சூழ்நிலை மாற்றத்தால் உற்பத்தித் திறன் பாதிப்பு, வளர்ச்சித் திறன் குறைவு போன்ற நிலைகள் ஏற்படுவதால் அதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அதை சரி செய்யும் வகையில் கடல்பாசி வளர்ப்போருக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் உரிய பயிற்சி மற்றும் அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. அதேபோல கடல்பாசி சேகரிப்பவர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கப்படுகிறது. கடல்பாசி வளர்ப்பு மீனவர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன.
மீன்வளத்துறை மூலம் கடற்பாசி வளர்ப்போருக்கு மானிய திட்டத்தில் பல்வேறு கடன் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை சரியான முறையில் கடல்பாசி வளர்ப்போர் கடைப்பிடித்து பயன் பெற்றிடவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT