Last Updated : 02 Jun, 2025 03:07 PM

 

Published : 02 Jun 2025 03:07 PM
Last Updated : 02 Jun 2025 03:07 PM

காட்டு யானைகளின் கர்ப்பத்தை கணிப்பது எப்படி? - வனக் கால்நடை மருத்துவர்கள் விளக்கம்

கோவை மருதமலை அடிவாரத்தில் கடந்த 17-ம் தேதி மயங்கி விழுந்த பெண் யானைக்கு வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார் (கோவை), விஜயராகவன் (முதுமலை புலிகள் காப்பகம்), சதாசிவம் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்), கலைவாணன் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மற்றும் முத்துராமலிங்கம் உள்ளிட்ட குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.

மயங்கிக் கிடந்த யானையை பொக்லைன் இயந்திரம் மூலம் பெல்ட் பொருத்தி நிற்க வைத்து கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். தமிழகத்தில் முதல் முறையாக காட்டு யானைக்கு அதன் காது நரம்பு வழியாக ஐ.வி. மூலம் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. சிறப்பு நீர் சிகிச்சை (ஹைட்ரோதெரபி) அளிக்கப்பட்டது. 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் யானை உயிரிழந்தது. பிரேத பரிசோதனையின் போது வயிற்றில் குட்டி இருப்பதும், யானை சாணத்தில் அரை கிலோ அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், வனக் கால்நடை மருத்துவர்களுக்கு யானை கர்ப்பமாக இருப்பதை கூட கண்டறிய தெரியவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து வனக் கால்நடை மருத்துவர்கள் சுகுமார், கலைவாணன் ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள யானைகள் முகாம்களில் 246 யானைகள் கர்ப்பமுற்று குட்டிகள் ஈன்றுள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு வனக் கால்நடை மருத்துவர்களுக்கு தெரியவில்லையெனில் வேறு எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவர்களுக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

யானை மயங்கி கீழே விழுந்து கிடந்தால் 12 மணி நேரத்தில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிடும். யானையின் நெஞ்சு சுருங்கி விரிய வேண்டும். அப்போது தான் மூச்சு விட முடியும். இதனால் யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறையாமல் இருக்க 30 முதல் 40 லிட்டர் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. பெல்ட் கொடுத்து நீண்ட நேரமாக நிற்பது போன்ற அழுத்தங்களுக்கு வலி நிவாரணியாகவும், புத்துணர்ச்சி பெறவும் ஹைட்ரோதெரபி எனப்படும் நீர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெண் யானை 18 முதல் 22 மாதங்களில் குட்டி போடும். 3 - 4 மாதங்களில் பருவ சுழற்சி வரும். இதுவரை ஒரு குட்டி கூட போடாத (primiparous cow) யானைகளில் 6 முதல் 10 மாதங்களில் யானையின் மார்பக பால் சுரப்பிகள் சற்று பெரிதாக தொடங்கும். அதேநேரம், ஏற்கெனவே குட்டி போட்டு (pluriparous cow) பால் சுரப்பி காம்புகள் பெரிதாக உள்ள யானைகளில் எந்த வித்தியாசமும் தெரியாது. இது போன்ற யானைகளின் பால்சுரப்பிகள் குட்டி ஈனுவதற்கு 3 முதல் 4 மாதங்களுக்கு முன்னரே சற்று வித்தியாசமாக பெரிதாக காணப்படும். இந்த வித்தியாசங்களை ஒருவர் தொடர்ந்து பல மாதங்களாக கண்காணித்தால் மட்டுமே அறிவது சாத்தியமாகும்.

மார்பக பால் சுரப்பிகளை அமுக்கி பாலை வெளியே எடுத்து இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து பார்க்கும்போது பிசுபிசுப்பு தன்மையில்லாமல் சற்று தண்ணீர் போல இருந்தால் அது கர்ப்பமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. 12 முதல் 16 மாதம் கர்ப்பம் உள்ள யானைகளில் மட்டுமே இந்த மாற்றம் தென்படும்.

இதுவும் ஏற்கெனவே குட்டி போட்டு பால் குடித்துக் கொண்டிருக்கும் குட்டி (suckling calf) வைத்துள்ள தாய் யானையில் இந்த மாற்றத்தை காண இயலாது. இது போன்ற யானைகள் குட்டி ஈனுவதற்கு 1 முதல் 2 மாதங்களுக்கு முன் மார்பக சுரப்பிகளில் இருந்து வெளிவரும் பால் தேன் போன்றும், ஈனுவதற்கு 1 முதல் 2 நாட்களுக்கு முன் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும் (colostrum) அடர்த்தியாக இருக்கும்.

ஆய்வகத்தில் ரத்தத்தில் புரோஜெஸ்டிரான் அளவை தொடர்ந்து 4 முதல் 8 மாத கால அளவில் கணக்கிடுவதால் கர்ப்ப காலத்தை கணிக்க இயலும். ஆனால் யானைக்கென்று பிரத்யேகமாக தாயாரிக்கப்பட்ட ஆண்டி புரோஜெஸ்டிரான் போன்ற ஆய்வக பரிசோதனை திரவம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இதுபோன்ற ஆய்வக திரவம் உலகில் யானை சம்பந்தமாக மாணவர்கள் ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. இது ஆராய்ச்சி அளவில் மட்டுமே உள்ளது. புரலாக்டின் அளவை ரத்தத்தில் அளவீடு செய்வதன் மூலம் கர்ப்ப தன்மையை அறியலாம். இதுவும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது. வயிற்று பகுதியை எக்ஸ்ரே எடுத்து மற்ற சிறிய விலங்குகளின் கர்ப்பத்தை கணிப்பதை போன்று யானைகளுக்கு சாத்தியமில்லை.

காட்டு யானைகளில் 16 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக உள்ள யானைகளுக்கு மட்டுமே மார்பக காம்புகளின் அளவு, அதிலிருந்து வெளியேறும் திரவத்தின் தன்மை, சில சமயங்களில் வயிற்றின் அளவு ஆகியவற்றை வைத்தும் மற்றும் குட்டி ஈனும் தருவாயில் உள்ள யானைகளுக்கு மட்டுமே கர்ப்பத்தை கண்டறிய சாத்திய கூறுகள் உள்ளன. எனவே, காட்டு யானைகள் முன்கூட்டியே கர்ப்பமாக உள்ளதா என்று அறியும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு.

எந்த ஒரு பெண் விலங்குக்கு சிகிச்சை அளித்தாலும் அது கர்ப்பமாக இருக்கலாம் என்ற கோணத்திலேயே சிகிச்சை அளிப்பது ஒரு பொதுவான வழிகாட்டுதல் நெறிமுறை. இந்த தாய் யானைக்கு 3 வயதில் புல் மேயும் குட்டியிருந்தும் அது பால் அருந்திக்கொண்டு இருந்தது. மார்பக பால் சுரப்பிகளில் வெளிப்பட்ட பாலை ஆய்வு செய்தபோதும் அதுவே எங்களுக்கு தெரியவந்தது. யானைகளின் பிரசவ கால இடைவெளி 4 முதல் 5 வருடம் ஆகும்.

உறுதியாக கர்ப்பம் என்று சொல்வதற்கு வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவ்வாறு தெரிந்து இருந்தாலும் தாயை காப்பாற்ற இதே சிகிச்சை முறையைத்தான் பின்பற்றி இருப்போம். சிகிச்சையில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x