Published : 23 May 2025 04:52 PM
Last Updated : 23 May 2025 04:52 PM
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
தமிழக வனக்கோட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறையும், முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி மே 23 (இன்று) தொடங்கி 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
அதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட உள்ளூர் தண்டா தெற்கு பிரிவு குரும்பனூர் பீட் பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட வனப்பகுதி, கர்நாடக மாநில எல்லையை ஒட்டி மேட்டூர் வனப்பகுதி இருப்பதால் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நேர்கோடு முறையில், நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகிய முறைகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. யானைகள் கணக்கெடுப்பு பணியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தன்னர்வலார்கள் மேட்டூர் வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “யானைகள் கணக்கெடுப்பு 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நாள் (மே 23) தொகுதி மாதிரி எடுக்கப்படும். யானைகளின் எண்ணிக்கை, பாலினம், வயது பிரிவுகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் உட்பட, நேரடியாக கண்காணித்து யானைகளின் தரவுகளைப் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.
யானைகளின் சாணம் மற்றும் கால் தடங்கள் பதிவு செய்யப்படும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கணக்கெடுப்பில் யானைகள் பதிவு செய்து புகைப்படம் எடுக்கப்படும். யானைகள் கணக்கெடுப்பு பணியில் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT