Published : 14 May 2025 06:18 AM
Last Updated : 14 May 2025 06:18 AM
சென்னை: சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது.
சென்னையின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது.
மீதமுள்ள நீர் ஏரிகளிலிருந்து எடுத்து விநியோகிக்கப்படுகிறது. மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வரும் 2035-ம் ஆண்டில் தண்ணீர் தேவை 2523 எம்எல்டியாகவும், 2050-ம் ஆண்டில் 3756 எம்எல்டியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், ``சென்னையின் மக்கள்தொகை பெருக்கத்தாலும், பருவநிலை மாற்றத்தாலும் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய நீர்த்தேக்கத்தை அமைப்பது இன்றியமையாததாகும்.
அந்த வகையில் சென்னைக்கு அருகில் கோவளம் உப வடிநிலத்தில் பருவகாலங்களில் கிடைக்கும் வெள்ள நீரின் ஒரு பகுதியை திருப்போரூர் வட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் 4375 ஏக்கர் பரப்பில், 1.6 டிஎம்சி கொள்ளளவில், ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் அளவுக்கு, சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும்'' என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத் துறை விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்கத்துக்கு ரூ.471 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு கிடைக்கும் 170 எம்எல்டி குடிநீரைக் கொண்டு சென்னை வாசிகளின் குடிநீர் தேவை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT