Published : 28 Apr 2025 02:08 PM
Last Updated : 28 Apr 2025 02:08 PM
திருக்கழுக்குன்றம் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தின் எதிரே உள்ள லட்சுமி தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்க, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதால், நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக உள்ளூர் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆன்மிக நகரமாகவும் மற்றும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. நகரைச் சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சில பேரூராட்சியின் பராமரிப்பிலும் மற்றும் வேதகிரீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பிலும் உள்ளன. இந்நிலையில், தாழக்கோயில் எனக் கூறப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிரே லட்சுமி தீர்த்தம் எனப்படும் குளம் அமைந்துள்ளது.
குளத்தில், கோடைக்காலத்தில் தண்ணீர் காணப்பட்டதாலும், முறையான பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் மண்டி, சமூக விரோத செயல்களின் இருப்பிடமாக உள்ளது. மேலும், குளத்தின் கரை பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள், வாகன நிறுத்துமிடம், குடியிருப்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால், குளத்தின் நீர்வரத்து கால்வாய்கள் முற்றிலும் தூர்ந்து காணப்படுகிறது.
இதுதவிர, குளத்தின் மேற்கு கரையில் உள்ள பழைய காவல் நிலைய கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதை பயன்படுத்தி, சமூக விரோதிகள் அப்பகுதியாக குளத்தின் உள்ளே சென்று முட்புதர்களின் மறைவில் பல்வேறு சட்ட விரோத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். அதனால், நகரின் நடுவே கோடை வெப்பத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படும் குளத்தின் கரையில் உள்ள முட்புதர்களை அகற்றி, நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, உள்ளூர் மக்கள் கூறியதாவது: லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைப்பதில் அரசுத்துறைகள் இடையே பல்வேறு சிக்கல்கள் இருந்ததால், குளத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. இதை பயன்படுத்தி, தற்போது குளத்தின் 4 கரைகளிலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கைவிடப்பட்ட பழைய காவல் நிலைய கட்டிட பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதி யின் சில அடி தூரத்தில் வேதகிரீஸ்வரர் கோயிலின் தேர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால், பழைய காவல் நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றுவதோடு நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது, சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் பணிகளை முறையாக மேற்கொள்ளும் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவலர் யுவராஜ் கூறியதாவது: லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்கும் பணிகளுக்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த புள்ளி பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும், குளத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் குளத்தின் 4 கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதுதவிர, சிறுவர்கள் எளிதாக குளத்தின் உள்ளே செல்லாத வகையில் சரியான திட்டமிடல்களுடன் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. அதேபோல், நகரின் உள்ளே அமைந்துள்ள 16 தீர்த்த குளங்களில் பெரும்பாலான குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில குளங்கள் மட்டுமே சீரமைக்க வேண்டியுள்ளது. அப்பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும். இதன்மூலம், இப்பேரூராட்சியில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT