Published : 16 Apr 2025 04:33 PM
Last Updated : 16 Apr 2025 04:33 PM

1,000 சதுர மீட்டரில் கடல்தாழை வளர்ப்பு - புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில் முன்முயற்சி

கடல்தாழை நடவு செய்யப்பட்டுள்ள இடத்தை அடையாளமிடும் வகையில் கடல் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள வேலி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில், கடல்வாழ் உயிரினங்களின் உணவான கடற்புற்களை (கடல்தாழை) நடவு செய்யும் பணியை வனத் துறை மேற்கொண்டுள்ளது. கடற்பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கும், உணவுக்காகவும் கடல் தாழைகள் பயன்படுகின்றன.

ஒரு கடற்பசு நாளொன்றுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரை கடல்தாழைகளை உணவாக உட்கொள்ளும் என வனத் துறையினர் கூறுகின்றனர். மேலும், நண்டு, மீன், இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யவும் கடல்தாழைகள் வெகுவாக பயன்படுகின்றன.

இதையடுத்து, தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல்- பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் கடற்புற்கள் (கடல்தாழை) நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.ஆர்.பட்டினத்தில் கரையில் இருந்து கடலில் 2 கி.மீ. தொலைவுக்குள் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் கடல்தாழை நடவு செய்யப்பட்டுள்ளது.

கடலுக்குள் பதியம் போடுவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள
மூங்கில் தட்டிகளில் சொருகப்பட்டுள்ள கடல்தாழை தண்டுகள்.

இப்பணிகளை வனத் துறை சார்பில் மேற்கொண்டு வரும் கடல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு நிறுவனமான ஓம்கார் என்ற சுற்றுச்சூழல் நிறுவனத்தினர் கூறியது: ட்ரோன் கேமராக்கள் மூலம் கடலில் கடல்தாழைகள் இல்லாத பகுதிகளைத் தேர்வு செய்து, மூங்கில் தட்டி போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் குறுக்கே சணல் கட்டி, கடல்தாழை தண்டுகளை நறுக்கி பதியம் செய்யப்படுகிறது. அதன்பிறகு, அந்தத் தட்டியை உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் கொண்டு சென்று நீருக்குள் பதிக்கப்படுகிறது.

எந்த இடத்தில் எல்லாம் பதியம் செய்யப்படுகிறதோ அந்த இடங்களில் கடல் மேற்பரப்பில் வலை கொண்டு அடையாளம் இடப்படுகிறது. மேலும், மீன்பிடி படகுகள் இவ்வழியே சென்றுவிடாத வகையில் அடையாளம் இடப்பட்டுள்ள வலையில் ஒளி பிரதிபலிப்பானும் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,000 சதுர மீட்டரில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஒன்றரை மாதத்தில் கடல்தாழைகள் துளிர்க்கத் தொடங்கிவிடும். ஒருவேளை எந்தப் பகுதியிலாவது துளிர்க்காமல் போனால் அப்பகுதியில் மீண்டும் நடவு செய்வோம். கரும்புதாழை, அருகுதாழை, ஊசிதாழை ஆகிய மூன்று வகையான கடல்தாழைகளை இங்கு தேர்வு செய்து நடவு செய்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x